அரசு பஸ் மோதி 3 வயது பெண் குழந்தை சாவு வீட்டுக்கு வெளியே விளையாடியபோது விபரீதம்
தூத்துக்குடியில், அரசு பஸ் மோதி 3வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தாள். வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த அவள், திடீரென ரோட்டுக்கு ஓடியதால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில், அரசு பஸ் மோதி 3வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தாள். வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த அவள், திடீரென ரோட்டுக்கு ஓடியதால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
பெண் குழந்தைதூத்துக்குடி சத்யாநகரை சேர்ந்தவர் ராஜேஷ். மெக்கானிக். இவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் சுவஸ்திகா(வயது 3). நேற்று காலை 9–30 மணி அளவில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முருகன் படத்தை வைத்து எடுத்து சென்றனர். இதனை காண்பிப்பதற்காக பெற்றோர், சுவஸ்திகாவை வீட்டின் வெளியே ரோட்டோரத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
அந்த வாகனம் சென்ற பிறகு, வீட்டின் முன்பு தூத்துக்குடி–திருச்செந்தூர் ரோட்டின் அருகே அவள், விளையாடிக் கொண்டு இருந்தாளாம். அப்போது நாசரேத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. பஸ்சை கயத்தாரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்தார்.
பஸ் மோதி சாவுபஸ் சத்யாநகர் பகுதியில் வந்த போது, ரோட்டோரமாக விளையாடிக் கொண்டு இருந்த சுவஸ்திகா, எதிர்பாராதவிதமாக ரோட்டுக்கு ஓடியதாக கூறப்படுகிறது. இதில் பஸ்சின் பக்கவாட்டு பகுதி அவள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். உடனடியாக உறவினர்கள் சுவஸ்திகாவை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவள் பரிதாபமாக இறந்தார். அவளுடைய உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவர் ராமகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.