நெகமம் அருகே கத்திமுனையில் வாலிபரை மிரட்டி நகை–பணம் கொள்ளை 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்


நெகமம் அருகே கத்திமுனையில் வாலிபரை மிரட்டி நகை–பணம் கொள்ளை 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 4 Jan 2018 4:00 AM IST (Updated: 4 Jan 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் அருகே கத்திமுனையில் வாலிபரை மிரட்டி 7½ பவுன் நகை–பணம் கொள்ளையடித்து காருடன்தப்பி சென்ற 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே வடசித்தூர் மெட்டுவாவி சாலையில் மன்றாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற ஆறுச்சாமி (வயது 70). விவசாயி. இவரது மனைவி கற்பகம் (68). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கு திருமணமாகி சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இளைய மகன் பிரபுராம் (53) என்பவர் பெற்றோருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பிரபு ராமுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவர் இரவு 11.45 மணிக்கு தூங்காமல் வீட்டை விட்டு வெளியே வந்து வாந்தி எடுத்துள்ளார்.

இதனை அங்கு மறைந்து இருந்த 4 மர்ம ஆசாமிகள் பார்த்ததும் அவரை கத்தி முனையில் கத்தி முனையில் வீட்டுக்குள் இழுத்து சென்றனர். இதனை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து சத்தம்போட்டனர். மர்ம ஆசாமிகள் அவர்களையும் சத்தம்போட்டால் குத்திவிடுவோம் என்று மிரட்டி, அவர்கள் இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டனர். இதனை தொடர்ந்து பிரபு ராமிடம், வீட்டில் நகை, பணம் எங்கே? என்று கேட்டு மிரட்டினர். அவர் பீரோவை காட்டியதால் அங்கு சென்ற மர்ம ஆசாமிகள், அதில் இருந்த 7½ பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்கள், எல்.இ.டி.டி.வி, ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டில் நிறுத்தி இருந்த காரையும் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இது குறித்து பிரபுராம் நெகமம் போலீசாருக்கு தகவல் கொடுதார். உடனே சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில், பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு கிருஷ்ண மூர்த்தி, இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.இதனை தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். காரில் தப்பிய மர்ம ஆசாமிகளை பிடிக்க சாலைகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். குடிமங்கலம்– தாராபுரம் சாலையில் சத்திரம் பகுதியில் நடந்த வாகன சோதனையில்,அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான ஒரு கார் வேகமாக வந்தது. போலீசாரை பார்த்ததும் காரைநிறுத்தி விட்டு அதில் இருந்தவர்கள் அருகில் இருந்த மக்காசோளத் தோட்டத்துக்குள் தப்பி ஓடினர். உடனே போலீசார் அவர்களை விரட்டினர். இதில் ஒருவரை மடக்கி பிடித்தனர். 3 பேர் நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இந்த நிலையில் தப்பிச்சென்ற 3 பேரும் ஜல்லிப்பட்டியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று அவர்களை பிடித்தனர். பின்னர் 4 பேரையும் பிடித்து நெகமம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளில் ஒருவர் புதுக்கோட்டையையும், 3 பேர் திருச்சியையும் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவம் நடந்த 6 மணிநேரத்துக்குள் கொள்ளையர்களை பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story