சசிகுமார் கொலை வழக்கில் போலீஸ் காவல் கேட்டு மனு: அரசு வக்கீலிடம் நீதிபதி சரமாரி கேள்விகள்


சசிகுமார் கொலை வழக்கில் போலீஸ் காவல் கேட்டு மனு: அரசு வக்கீலிடம் நீதிபதி சரமாரி கேள்விகள்
x
தினத்தந்தி 4 Jan 2018 4:45 AM IST (Updated: 4 Jan 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைதான முபாரக்கிடம் விசாரணை நடத்த 14 நாட்கள் தேவையா? என்று அரசு வக்கீலிடம் நீதிபதி சரமாரியாக கேள்விகள் கேட்டார்.

கோவை,

கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த 2016–ம் ஆண்டு செப்டம்பர் 22–ந் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த அபுதாகீர்(வயது 27), சதாம் (30), உக்கடம் கோட்டைபுதூர் ஜி.எம்.நகரை சேர்ந்த சுபைர் (33) ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முபாரக் (28) என்பவர் கடந்த 25–ந் தேதி பொள்ளாச்சியை அடுத்த வடசித்தூர் பிரிவு அருகே சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவரை மறுநாள் (26–ந் தேதி) போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது முபாரக்கை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க 14 நாட்கள் அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனுவை நீதிபதி 2–ந் தேதிக்கு தள்ளி வைத்தார். அதன்பேரில் முபாரக்கை போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்று சேலம் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அந்த மனு 3–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்பேரில் அந்த மனு நேற்று கோவை மாவட்ட நீதிபதி (பொறுப்பு) கிறிஸ்டோபர் முன்பு மதியம் 1.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

இதற்காக முபாரக்கை சேலம் சிறையில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் கோவைக்கு வேனில் அழைத்து வந்து ஆஜர்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து முபாரக்கை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோரும் மனுவை நீதிபதி கிறிஸ்டோபர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

அப்போது முபாரக் தரப்பில் வக்கீல் நவ்பல் ஆஜராவதாக இருந்தார். ஆனால் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரால் ஆஜராக முடியவில்லை.

இதைத் தொடர்ந்து முபாரக் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘சசிகுமார் கொலை வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னை கைது செய்தபோதே போலீசார் போதுமான அளவிற்கு என்னிடம் விசாரித்து விட்டனர். எனவே என்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்தால் போலீசார் சித்ரவதை செய்வார்கள். எனக்கு மனஉளைச்சல் ஏற்படும். எனவே என்னை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுக்கக்கூடாது’ என்று கூறிஇருந்தார்.

அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தகுமார் முபாரக்கை போலீஸ் காவலில் எடுத்துச் செல்வதற்கான உறுதி அளித்தார்.

அதைத் தொடர்ந்து, முபாரக்கை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் மனு மீது அரசு தரப்பு வக்கீல் ஆறுமுகம் வாதம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முபாரக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க 14 நாட்கள் அனுமதி அளிக்க வேண்டும். விசாரணையின்போது முபாரக்கை போலீசார் உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்த மாட்டார்கள் என்று கூறினார்.

இதைக் கேட்ட நீதிபதி, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அளித்த உறுதிமொழியில் முபாரக்கை அவர் துன்புறுத்தமாட்டார் என்று தான் கூறியுள்ளார். மற்றவர்கள் துன்புறுத்த மாட்டார்கள் என்று எந்த உறுதியும் கூறப்படவில்லையே’ என்று கேள்வி எழுப்பினார்.

உடனே அரசு வக்கீல் ஆறுமுகம் கேட்டுக்கொண்டதின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தகுமார், ‘முபாரக்கை போலீஸ் காவலில் எடுத்துச் சென்றால் நானோ, என்னுடன் பணியாற்றும் ஊழியர்களோ, போலீஸ் அதிகாரிகள் யாரும் அவரை மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்தமாட்டார்கள். மேலும் அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ உதவிகளும் செய்து கொடுக்கப்படும்’ என்று மீண்டும் உறுதிமொழி அளித்தார்.

அதைத்தொடர்ந்து அரசு வக்கீல் ஆறுமுகம் வாதிட்டார். அப்போது, ‘இதற்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். எனவே கொலைக்கான நோக்கம் குறித்து விசாரிக்க முபாரக்கை 14 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்றார்.

நீதிபதி கிறிஸ்டோபர்:– இந்த கொலை சம்பவம் நடந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. அது தொடர்பாக இதுவரை 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அப்படி இருந்தும் இன்னுமா கொலைக்கான நோக்கத்தை போலீசார் கண்டுபிடிக்காமல் உள்ளனர்?

அரசு வக்கீல் ஆறுமுகம்:– இந்த கொலை வழக்கின் நோக்கத்தை போலீசார் ஏற்கனவே கண்டுபிடித்து விட்டனர். ஆனால் அந்த வழக்கில் முபாரக்கின் பங்கு என்ன என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. மேலும் இந்த வழக்கில் தேடப்படும் மற்றொருவர் பற்றிய விவரங்களையும் சேகரிக்க வேண்டியுள்ளது.

நீதிபதி:– முபாரக்கை 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தேவையான காரணங்களை போலீசார் அவர்களின் மனுக்களில் குறிப்பிடவில்லையே?.

அரசு வக்கீல்:– சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக மேலும் பல தகவல்கள் விசாரிக்க வேண்டி இருப்பதாலும், அதன் பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டி இருப்பதாலும் 14 நாட்கள் போலீஸ் காவல் தேவை.

நீதிபதி:– இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றி விட்டார்கள் என்று கூறப்படுகிறது. முபாரக் கைது செய்யப்பட்ட போதே அவர் வாக்குமூலம் அளித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. இனி அவரிடம் என்ன விசாரிக்க போகிறார்கள்?

அரசு வக்கீல்:– முபாரக்கை கடந்த 25–ந் தேதி 4.30 மணிக்கு பொள்ளாச்சி அருகே போலீசார் கைது செய்தனர். அடுத்த 24 மணி நேரத்தில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு விட்டார். எனவே அவரிடம் போதுமான அளவு விசாரிக்க முடியவில்லை. இந்த வழக்கின் சதிதிட்டம் குறித்தும், தலைமறைவாக உள்ளவரை பற்றியும் விசாரிக்க வேண்டி உள்ளது.

நீதிபதி:– அப்படியென்றால் அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கிறேன்.

அரசு வக்கீல்:– 2 நாட்கள் போதாது. இந்த வழக்கு சாதாரண வழக்கு கிடையாது. பல்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டி இருப்பதால் மேலும் பல நாட்கள் போலீஸ் காவல் அளிக்க வேண்டும்.

நீதிபதி:– உங்களை (முபாரக்கை பார்த்து) போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்கிறார்கள். அதுபற்றி நீங்கள் எதுவும் சொல்கிறீர்களா?

முபாரக்:– நான் ஏற்கனவே எனது நிலையை கூறி விட்டேன். என்னை போலீசார் அழைத்துச் சென்றால் மனஉளைச்சலுக்கு ஆளாவேன்.

நீதிபதி:– போலீஸ் காவல் கோரிக்கை மனு மீதான முடிவை மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கிறேன்.(அப்போது மணி மதியம் 2.10) இவ்வாறு கூறி விட்டு நீதிபதி இருக்கையில் எழுந்து சென்று விட்டார்.

அதன்பின்னர் மதியம் 4.50 மணிக்கு முபாரக்கை 2 நாட்கள் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். அந்த உத்தரவில் அவர் கூறிஇருப்பதாவது:–

முபாரக்கை 3–ந் தேதி மாலை 5 மணி முதல் 5–ந் தேதி மாலை வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கலாம். 5–ந் தேதி மாலை 5 மணிக்கு அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். அவரை 4–ந் தேதி மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை முபாரக்கின் வக்கீல்கள் சந்தித்து பேசலாம் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து முபாரக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பலத்த பாதுகாப்புடன் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். முபாரக்கை போலீஸ் காவலில் அனுமதிக்க கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த மனு மீது நேற்று மதியம் 1.30 மணி முதல் 2.10 மணி வரை வாதம் நடந்தது.


Next Story