மர்மமான முறையில் இறந்த 2 வாலிபர்கள்: கொலை வழக்காக பதிவு செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மர்மமான முறையில் இறந்த 2 வாலிபர்கள்: கொலை வழக்காக பதிவு செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2018 3:15 AM IST (Updated: 4 Jan 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

மர்மமான முறையில் இறந்த 2 வாலிபர்களின் வழக்கை கொலை வழக்காக மாற்ற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள வசந்தகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கிருபாநிதி (வயது 21), கோபிநாத் (17), வீரமணி (15) ஆகிய 3 பேரும் நண்பர்கள். கடந்த 31–ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாட சென்ற இவர்கள் 3 பேரும் வசந்த கிருஷ்ணாபுரம்–ஆதிச்சனூர் சாலையில் மர்மமான முறையில் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடினர். இதைபார்த்த அந்த வழியாக வந்தவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருபாநிதி, வீரமணி ஆகிய 2 பேரும் இறந்தனர். கோபிநாத்துக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்த புகாரின்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கிருபாநிதி உள்ளிட்ட 3 பேர் மீதும் தாக்குதல் நடத்திய கொலை கும்பலை கைது செய்ய கோரியும், சந்தேக மரணம் என பதியப்பட்டுள்ள வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரியும், கொலை செய்யப்பட்ட கிருபாநிதி, வீரமணியின் குடும்பத்தினருக்கு அரசு நிதி உதவி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாமரன், தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ஆற்றலரசு, தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, ராதாமணி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, சுப்பிரமணியன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் ஜகாங்கீர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் வக்கீல் சேரலாதன், தமிழ்நிலவன், கண்ணாயிரம், தி.மு.க. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் தங்கம், ரவிச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபி, முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் குணா, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் வக்கீல் அன்பு, மணலூர்பேட்டை ஜெய்கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் தமிழேந்தி நன்றி கூறினார். ஆர்பாட்டத்தின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு திருக்கோவிலூர் அசோக்குமார், விழுப்புரம் சங்கர் ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story