திருப்பூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபடாமல் இறுதி பட்டியலை தயாரிக்க வேண்டும்


திருப்பூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபடாமல் இறுதி பட்டியலை தயாரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Jan 2018 4:00 AM IST (Updated: 4 Jan 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபடாமல் இறுதி பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளர் அறிவுறுத்தினார்.

திருப்பூர்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி கடந்த 1–ந் தேதியை தகுதிநாளாக கொண்டு சிறப்பு சுருக்கு முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3–ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் திருப்பூர் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி மூலமாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. பின்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் குறுந்தகடு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 3–ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 15–ந் தேதி வரை பெறப்பட்டது. அந்த விண்ணப்பங்கள் குறித்து கள அலுவலர்கள் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து வருகிற 10–ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளரான சமூக பாதுகாப்பு ஆணையாளர் லால்வேனா நேற்று திருப்பூர் மாவட்டத்துக்கு வந்தார். திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்துக்கு சென்ற அவர், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பதிவேடுகள் மற்றும் புதிய வாக்காளர் சேர்க்கை குறித்த விண்ணப்பங்கள், முகவரி மாற்றம், பெயர் மாற்றம் குறித்த விண்ணப்பங்களை ஆய்வு செய்தார்.

விண்ணப்பங்களை ஆய்வு செய்யும்போது தனிக்கவனம் செலுத்தி உறுதிப்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். புதிய வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபடாமல் வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று சிறப்பு பார்வையாளர் லால்வேனா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். திருப்பூர் சப்–கலெக்டர் ஷ்ரவன்குமார், தேர்தல் தாசில்தார் முருகதாஸ், வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story