வீரபாண்டி அருகே டாஸ்மாக் பாரை சூறையாடிய கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் கைது


வீரபாண்டி அருகே டாஸ்மாக் பாரை சூறையாடிய கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jan 2018 4:15 AM IST (Updated: 4 Jan 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் வீரபாண்டி அருகே பட்டப்பகலில் டாஸ்மாக் பாரை சூறையாடியதாக கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீரபாண்டி,

திருப்பூர் வீரபாண்டி அருகே நொச்சிப்பாளையம் பிரிவில் டாஸ்மாக் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாருக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் 3 பேர் வந்தனர். அவர்கள் டாஸ்மாக் பாரின் கதவை தட்டி மது வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் கடையின் உள்ளே இருந்த ஊழியர்கள், லைசென்ஸ் இல்லாததால் பார் செயல்படவில்லை என்று கூறினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் கடை ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடையில் இருந்த ஊழியர்கள் ஆத்திரத்துடன் வெளியே வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இந்த நிலையில் அங்குள்ள எல்.என்.டி.தண்ணீர் தொட்டியில் லாரியில் தண்ணீர் நிரப்ப வந்த ராஜேஷ் என்பவர் உள்பட 3 பேர் டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டிருந்தனர்.

இதனால் இவர்கள்தான் தங்களை தரக்குறைவாக பேசியவர்கள் என்று பார் ஊழியர்கள் நினைத்தனர். எனவே அந்த 3 பேரையும் பார் ஊழியர்கள் தாக்கினார்கள். இதில் ராஜேசுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் கல்லூரி மாணவர்கள் உள்பட சுமார் 50 பேர் அந்த டாஸ்மாக் கடைக்கு வந்தனர். பின்னர் திடீரென்று பாரில் இருந்த நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தினார்கள். இது குறித்து வீரபாண்டி போலீசில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் ராஜா புகார் செய்தார்.

அதன்பேரில் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அனைவரும் தப்பிச்சென்று விட்டனர். டாஸ்மாக் பாரை சேதப்படுத்தியது தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமார், ஜெரால்டு பெலிக்ஸ், சிவக்குமார், ஜெகதீஸ், நவீன், சரவணகுமார் ஆகிய 6 கல்லூரி மாணவர்கள் மற்றும் முருகன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அத்துடன் ராஜேஷை தாக்கியது தொடர்பாக உக்கிரபாண்டி அருண் சுரேஷ்குமார் என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் டாஸ்மாக் பாருக்குள் கல்லூரி மாணவர்கள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story