விபத்தில் காயம் அடைந்தவரை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் மோதல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட தொழிலாளி பலி


விபத்தில் காயம் அடைந்தவரை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் மோதல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட தொழிலாளி பலி
x
தினத்தந்தி 4 Jan 2018 3:30 AM IST (Updated: 4 Jan 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் காயம் அடைந்தவரை சிகிச்சைக்கு ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் வேன் மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஏற்கனவே ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட தச்சு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

உடுமலை

உடுமலையை அடுத்த குடிமங்கலம் அருகில் உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் முகமது அலி (வயது 55). தச்சுவேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை உடுமலை–தாராபுரம் சாலையில் ஒரு வே பிரிட்ஜ் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் ஒன்று முகமது அலி மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முகமது அலியை ஒரு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர் மேல்சிகிச்சைக்காக அதே ஆம்புலன்சில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆம்புலன்ஸ் வேனை டிரைவர் பூபதி ஓட்டினார். டிரைவரின் இருக்கை அருகே மற்றொரு டிரைவர் அருண்குமார் என்பவர் அமர்ந்து இருந்தார். பின்புறம் ஸ்டெச்சரில் முகமது அலி படுக்க வைக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு உதவியாக அவருடைய மகள் மெகராஜ்பானு மற்றும் பால்ராஜ் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

ஆம்புலன்ஸ் வேன் உடுமலை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை அந்தியூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்தது.

இதில் வேனில் இருந்த முகமது அலி மற்றும் அவருக்கு துணையாக சென்ற மெகராஜ்பானு, பால்ராஜ் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பூபதி, அருண்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காயம் அடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சியில் உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது அலி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. மற்றவர்களுக்கு அதே மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், சப்–இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் பூபதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story