விவசாயிகள் சாலை மறியல் கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தல்


விவசாயிகள் சாலை மறியல் கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Jan 2018 4:00 AM IST (Updated: 4 Jan 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

கடைமடை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி திருச்சிற்றம்பலம் அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம், பெரியநாயகிபுரம், ஏனாதிகரம்பை உள்ளிட்ட கடைமடை பாசன பகுதிகளில் பல ஆயிரம் எக்டேரில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் பருவமழை போதிய அளவு பெய்யாததாலும், காவிரியின் கிளை வாய்க்கால்களான ஆவணம் மெயின் வாய்க்கால், புதுப்பட்டினம் 1 மற்றும் 2-ம் நம்பர் வாய்க்கால்களில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படாததாலும் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி வாடி வருகின்றன.

இந்த நிலையில் கடைமடை பகுதியில் உள்ள ஆவணம், புதுப்பட்டினம் பகுதி வாய்க்கால்களில் பாசனத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்து விடக்கோரி ஆவணம் பகுதி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையடுத்து பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 10 நாட்களுக்குள் தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் கூறினர். ஆனால் அதன்படி தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதையடுத்து விவசாயிகள் நேற்று மாலை திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் அக்னி பஜார் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன், பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரெண்டு செங்கமலக்கண்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நாளை (இன்று) முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story