புத்தூர் நால் ரோட்டில் இருந்து வயலூர் சாலை வரை இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்


புத்தூர் நால் ரோட்டில் இருந்து வயலூர் சாலை வரை இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 4 Jan 2018 4:15 AM IST (Updated: 4 Jan 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

புத்தூர் நால் ரோட்டில் இருந்து வயலூர் சாலை வரை நெடுஞ்சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலையோரம் பலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் மாநில நெடுஞ் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி-திண்டுக்கல் சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதே போன்று ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து நேற்று திருச்சி புத்தூர் நால் ரோட்டில் இருந்து வயலூர் சாலை வரை, மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் எந்திரங்களை கொண்டு வந்தனர். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் ஏராளமானபேர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, “கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த பணி இன்றும் (வியாழக்கிழமை) தொடரும். இதே போன்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாநில நெடுஞ்சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்” என்று கூறினர். 

Next Story