2 கி.மீ தூரத்துக்கு தேங்கி நிற்கும் கழிவுகள்: கொரட்டூர் ஏரி கால்வாய், சாக்கடையாக உருமாறிய அவலம்
கொரட்டூர் ஏரி கால்வாயில் சுமார் 2 கி.மீ தூரத்துக்கு கழிவு நீர் தேங்கி இருப்பதால் அந்த கால்வாய் சாக்கடையாக உருமாறி உள்ளது.
அம்பத்தூர்,
சென்னை கொரட்டூர் ஏரி ஆரம்பத்தில் 990 ஏக்கர் பரப்பளவில் மிக பிரமாண்டமாக கட்டமைக்கப்பட்டது. இந்த ஏரி 1970-ம் ஆண்டுக்கு முன்பு சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியாக இருந்து வந்தது. 1970-ம் ஆண்டுக்கு பின்பு அங்கு இருந்து குடிநீர் எடுப்பதை தமிழக அரசு நிறுத்திவிட்டது.
இந்த நிலையில் 1972-ல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கொரட்டூரில் 72 தெருக்கள் கொண்ட சென்ட்ரல் நிழற்சாலை, தெற்கு நிழற்சாலை, மேற்கு நிழற்சாலை என பிரித்து உயர், மத்திய, குறைந்த வருவாய் பிரிவினருக்கென ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை உருவாக்கியது.
அதிலிருந்து அந்த பகுதி அசுர வளர்ச்சி அடைந்து அருகில் உள்ள கருக்கு, மேனாம்பேடு, பட்டரவாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் ஏரிப்பகுதியில் ஆக்கிரமிக்க தொடங்கியது. இதனால் 990 ஏக்கரில் இருந்த கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி தற்போது 540 ஏக்கராக சுருங்கி விட்டது.
உபரிநீர் வெளியேறும் கால்வாய்
மழைக்காலங்களில் கொரட்டூர் ஏரி நிரம்பி அதில் இருந்து உபரிநீர் மற்றும் மழைநீர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அமைத்த சென்ட்ரல் நிழற்சாலை பகுதியில் உள்ள கால்வாய் வழியாக வெளியேறி பாடி மேம்பாலம் பகுதி வழியாக சென்று ஓட்டேரி அருகே கூவம் கால்வாய்க்கு சென்றடைந்தது.
உபரி மற்றும் மழைநீர் வெளியேறும் கால்வாய் பகுதியிலும் ஆக்கிரமிப்பு சூழ்ந்ததால் மழைக் காலங்களின்போது கொரட்டூர், பட்டரவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தது.
கடந்த 2015-ல் ஏற்பட்ட பெரும் மழையினால் இப்பகுதிகளில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. வில்லிவாக்கம் சிட்கோநகர் பகுதி ஒரு மாதத்திற்கும் மேலாக வெள்ளத்தில் மிதந்தது.
பாதியில் நின்று விட்ட பணிகள்
இதனால் வெள்ள பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கித்தவித்த உபரி மற்றும் மழைநீர் வெளியேறி வந்த கால்வாயை ரூ.12 கோடி செலவில் காங்கிரீட் கால்வாய் ஆக மாற்றி அமைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு அந்த கால்வாய் சீரமைப்பு பணிகளில் சரியான திட்டமிடல் இல்லாததால் கொரட்டூர் சென்ட்ரல் நிழற்சாலை வழியே செல்லும் இந்த 2 கி.மீ நீளம் கொண்ட பிரமாண்ட காங்கிரீட் கால்வாய் பாடி டி.வி.எஸ். கம்பெனி பின்புறம் வந்து பாதியில் நின்றுவிட்டது.
அதற்கு அடுத்து ரெயில்வே துறைக்கு சொந்தமான இடம் உள்ளதால் அதனை தொடர்ந்து பணியை நிறைவேற்றி ஓட்டேரி கூவம் கால்வாயை சென்றடையும் வகையில் கால்வாய் பணியை முடிக்க முடியவில்லை.
தேங்கி நிற்கும் கழிவுகள்
இதனால் தற்போது கொரட்டூர் பகுதி வீடுகளின் கழிவுநீர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறும் தொழிற்சாலைகளின் கழிவுகள், அம்பத்தூர் ஆவின் பால் தொழிற்சாலை கழிவுகள் என அந்த கால்வாயில் கலந்து முழுவதும் சாக்கடை கால்வாயாக மாறி உள்ளது. சுமார் 2 கி.மீ தூரம் கழிவுநீர் நிரம்பி வெளியேறாமல் மாதக் கணக்கில் தேங்கி உள்ளது.
இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. கொசுக்களின் படையெடுப்பால் மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.
செவிசாய்க்காத அதிகாரிகள்
சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அந்த பகுதி முழுவதும் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே ரெயில்வே துறையிடம் உரிய அனுமதி பெற்று பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள கால்வாய் பணிகளை முழுவதுமாக செய்து முடிக்க வேண்டும் என கொரட்டூர் பொதுமக்கள் பல முறை அரசிடம் முறையிட்டனர்.
ஆனால் அவர்களின் குரலுக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. எனவே மக்களின் துயரங்களை போக்கும் வகையில் இந்த பிரச்சினையில் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story