ரேஷன் கடையில் காலாவதியான உப்பு விற்கப்படுவதாக புகார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ரேஷன் கடையில் காலாவதியான உப்பு பாக்கெட் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவித்த பொதுமக்கள், இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
வாலாஜாபாத்,
கூட்டுறவு துறையின் கீழ் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு விலையில்லா அரிசி, மானிய விலையில் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்எண்ணெய் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.
மேலும் பொருட்களை வாங்கும் மக்களிடம் சோப்பு, உப்பு, புளி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வலுக்கட்டாயமாக விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்கள் தரம் குறைவாக உள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
காலாவதியான உப்பு
இந்நிலையில் வாலாஜாபாத் தாலுகாவுக்கு உட்பட்ட தென்னேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஏபி.093 எண் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கட்டாயப்படுத்தி உப்பு விற்பனை செய்யப்பட்டது. அதை வாங்கி சென்ற குடும்ப அட்டைதாரர்கள் வீட்டில் சென்று பார்த்த போது உப்பு பாக்கெட் காலாவதியானது என தெரியவந்தது.
அந்த உப்பு பாக்கெட் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘பேக்கிங்’ செய்யப்பட்டுள்ளது. ‘பேக்கிங்’ செய்யப்பட்ட நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு காலாவதியாகிடும் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி அந்த உப்பு பாக்கெட் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் காலாவதி ஆகி விட்டது. ஆனால் அதன் மேல் காலாவதி தேதியை 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் என மாற்றி ஒட்டி விற்பனை செய்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஏழை மக்களுக்கு நியாய விலையில் தரமான பொருட்களை வழங்க வேண்டிய அரசுத்துறையே காலாவதி பொருட்களை விற்பனை செய்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே காலாவதியான பொருட்களை காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என உயர் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்யவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story