நாராயணசாமி, கவர்னரிடம் சரண்டர் ஆகிவிட்டாரா? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி
கவர்னர் கிரண்பெடியை திடீரென பாராட்டும் முதல்-அமைச்சர் நாராயணசாமி அவரிடம் சரண்டர் ஆகிவிட்டாரா? என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி,
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கண்டனம்
பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக அவ்வப்போது திராவிட இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு சீர்திருத்த சட்டங்களை கொண்டுவந்துள்ளன. இதன் காரணமாகவே குழந்தை திருமணம் நிறுத்தம், உடன்கட்டை ஏறுவது தடுப்பு, விதவை மறுமணம் போன்ற செயல்கள் நடந்தன. அதனடிப்படையில் முஸ்லீம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு முத்தலாக் சம்பந்தமாக ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்த சட்டத்தை அரசியல் ரீதியாக எதிர்க்கும் தி.மு.க. மற்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு அ.தி.மு.க. கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. இவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் முஸ்லீம் பெண்களுக்கு எதிரான கருத்துகளை கூறி வருகிறார்கள். இதை இஸ்லாமிய பெருமக்கள் அறிந்துகொண்டு அவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
சரண்டர் ஆகிவிட்டாரா?
முதல்-அமைச்சர் நாராயணசாமி இடத்துக்கு இடம், நேரத்துக்கு நேரம் மாற்றிமாற்றி பேசுவதில் வல்லமை மிக்கவர். புத்தாண்டு தொடர்பாக அதிகாரிகள் கூட்டத்தை கவர்னர் கிரண்பெடி நடத்தியபோது, இது கவர்னரின் வேலையல்ல என்று கூறினார். இப்போது கவர்னரை திடீரென பாராட்டுவது அவரது இரட்டை வேடத்தை காட்டுகிறது. அவர் என்ன காரியத்தை சாதிக்க பார்க்கிறார் என்று தெரியவில்லை. இதில் ஏதும் உள்நோக்கம் உள்ளதா? முதல்-அமைச்சர் நாராயணசாமி கவர்னரிடம் சரண்டர் ஆகிவிட்டாரா? அல்லது அதற்கு அச்சாரம் போடுகிறாரா?
சுற்றுலா என்ற பெயரில் புதுவை கலாசாரம் சீரழிக்கப்பட்டு வருகிறது. புதுவையில் சுற்றுலா என்றாலே மது, மங்கை என்ற நினைப்பில் பலர் வருகிறார்கள். அரைகுறை ஆடையுடன் திரியும் அவர்களால் கலாசார சீரழிவு ஏற்படுகிறது. மதுக்கடைகளில் பெண்களுக்கும், வயது குறைந்தவர்களுக்கும் மது கொடுக்கக்கூடாது.
அனுமதி தரக்கூடாது
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கேளிக்கை வரியாக புதுவை நகராட்சிக்கு ரூ.9.14 லட்சமும், உழவர்கரை நகராட்சிக்கு ரூ.2 லட்சமும் மட்டுமே வருமானமாக வந்துள்ளது. ஆனால் புதுவை அரசு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சுமார் ரூ.20 லட்சம் செலவு செய்துள்ளது. ஒவ்வொரு ஓட்டலிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு என நபர் ஒருவருக்கு ரூ.4 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் நகராட்சிக்கு ரூ.11 லட்சம் மட்டுமே வருமானம் வந்துள்ளது.
கேளிக்கை வரி 40 சதவீதம் உண்மையாகவே வசூலிக்கப்பட்டிருந்தால் பல கோடி வருமானம் வந்திருக்கும். ஆனால் அந்த வரி திருட்டுத்தனமாக பலரது பாக்கெட்டிற்குள் சென்றுள்ளது. இத்தகைய திருட்டுத்தனங்கள் செய்தவர்களுக்கு பாதுகாப்பு தருவதுதான் கவர்னரின் வேலையா? அடுத்தவருடம் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தரக்கூடாது.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
Related Tags :
Next Story