மனநல மருத்துவமனையில் காவலாளி கொலை கை, கால்களை கட்டிப்போட்டு 4 நோயாளிகள் வெறிச்செயல்
தஞ்சை அருகே மனநல மருத்துவமனையில் கழுத்தை இறுக்கி காவலாளி கொலை செய்யப்பட்டார். கை, கால்களை கட்டிப்போட்டு 4 நோயாளிகள் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த வல்லத்தில் தனியார் மனநல மருத்துவமனை உள்ளது. இங்கு போதைக்கு அடிமையான அரியலூர் மாவட்டம் உக்கோட்டையை சேர்ந்த அஜீத்குமார் (20), தஞ்சை ஊரணிபுரத்தை சேர்ந்த அருண்பாலாஜி (22), காரைக்காலை கார்த்தி என்கிற பாக்கியசாமி (38)மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு காவலாளி ஜோதிராமலிங்கத்திடம் சென்று நாங்கள் ஊருக்கு செல்ல வேண்டும். எங்களை வெளியே விடுங்கள் என்றனர். அதற்கு ஜோதிராமலிங்கம் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் 4 பேரும் சேர்ந்து ஜோதிராமலிங்கத்தின் கை, கால்களை கட்டிப்போட்டு, துண்டால் அவரின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பிஓடினர்.
நேற்று அதிகாலை 3 மணிக்கு மருத்துவமனையை நடத்தி வந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனைக்கு காரில் வந்தார். அப்போது வல்லம் பஸ் நிலையத்தில் தனது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற 4 பேர் நிற்பதை பார்த்தார். இதனால் அவர் காரை நிறுத்திவிட்டு 4 பேரையும் மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தார்.
அப்போது அவர்கள் 4 பேரும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவருடன் காரில் ஏறி மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது மருத்துவமனையில் காவலாளி ஜோதிராமலிங்கம் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்து தெரிய வந்தது. மேலும் தப்பிச்சென்ற 4 பேர் தான் காவலாளியை கொலை செய்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த வல்லம் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் அஜீத்குமார், அருண்பாலாஜி, கார்த்தி என்கிற பாக்கியசாமி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.