கார் டிரைவர்கள் 3 பேர் மீது சரமாரி தாக்குதல் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


கார் டிரைவர்கள் 3 பேர் மீது சரமாரி தாக்குதல் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Jan 2018 3:45 AM IST (Updated: 5 Jan 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில், கார் டிரைவர்கள் 3 பேரை, மோட்டார் சைக்கிளில் வந்து தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் இருந்த கார் நிறுத்தும் இடம் தற்போது நகராட்சி பூங்கா அருகே மாற்றப்பட்டுள்ளது. அங்கு கார் டிரைவர்கள் தங்களது கார்களை நிறுத்தி வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்கள். வழக்கம்போல் நேற்று காலையில் டிரைவர்கள், கார்நிறுத்தும் இடத்தில் இருந்தனர்.

அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் அங்கு இருந்த கார் டிரைவர்கள் ஸ்டீபன் (வயது 43), புத்தளம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை (59), ஈத்தாமொழி அருகே வேப்பவிளை பகுதியை சேர்ந்த அய்யப்பன் (53) ஆகிய 3 பேரையும் சரமாரியாக தாக்கினர்.

இதைப்பார்த்து மற்ற டிரைவர்கள் ஓடிவந்ததும் அந்த 4 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பி ஓடிவிட்டனர்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்த சம்பவத்தில் டிரைவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 3 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி, டிரைவர்களை தாக்கிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. 

Next Story