பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்: சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த பயணிகள்


பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்: சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த பயணிகள்
x
தினத்தந்தி 5 Jan 2018 4:30 AM IST (Updated: 5 Jan 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் காரணமாக நாகர்கோவிலில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் நேற்று இரவில் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும், அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்து அனைவருக்கும் 2.57 சதவீதம் சம்பளத்தை உயர்த்தி வழங்கவேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசுடன் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை நேற்று தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலையில் இருந்து திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். குமரி மாவட்டத்திலும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

எனவே நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையம், அண்ணா பஸ் நிலையம் மற்றும் குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை முதலே பஸ்கள் இயக்கப்படுவது குறைக்கப்பட்டு, பணிமனைக்கு பஸ்கள் கொண்டு வரப்பட்டன. இதனால், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து தகவல் அறிந்தவர்கள் அவசர, அவசரமாக தங்களின் வேலைகளை முடித்துக்கொண்டு, இயக்கப்பட்ட ஒன்றிரண்டு பஸ்களில் ஏறி தங்களின் ஊர்களுக்கு திரும்பி சென்றனர். ஆனால், பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் குறித்து அறியாதவர்கள், பஸ் நிலையங்களில் தவிக்கும் நிலைமை ஏற்பட்டது. குறிப்பாக கிராமங்களுக்கான பஸ் சேவை முடங்கியது.

எனவே பொதுமக்கள் சிரமமின்றி தங்களின் ஊர்களுக்கு திரும்பி செல்லும் வகையில் கனிசமான பஸ்களை இயக்கும்படி போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஊட்டி, கோவை உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்கு இயக்கப்படும் பஸ் தொழிலாளர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால், தொலை தூரங்களுக்கு செல்லும் பஸ்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில்கொண்டு பஸ்களை இயக்க முடிவு செய்தனர். மேலும், அவ்வாறு தொலைதூரத்துக்கு செல்லும் பஸ்களை சேரும் இடத்திலேயே நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூறினார்கள்.

இதுதொடர்பாக, போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘எங்களின் போராட்டம் முழு அளவில் வெற்றி பெறும் வரையில் பஸ்களை இயக்க மாட்டோம். போராட்டம் தொடரும்’ என்று தெரிவித்தனர். 

Next Story