ஒகி புயலில் இறந்து கேரளாவில் கரை ஒதுங்கிய மேலும் 5 பேரின் உடல் அடையாளம் தெரிந்தது


ஒகி புயலில் இறந்து கேரளாவில் கரை ஒதுங்கிய மேலும் 5 பேரின் உடல் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 5 Jan 2018 4:30 AM IST (Updated: 5 Jan 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலில் இறந்து கேரளாவில் கரை ஒதுங்கியவர்களில் மேலும் 5 பேரின் உடல் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி வீசிய ஒகி புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. புயலில் சிக்கி கடலுக்குள் மூழ்கிய பல மீனவர்களின் உடல்கள் கேரள கடல் பகுதியில் கரை ஒதுங்கின. இந்த உடல்கள் மீட்கப்பட்டு திருவனந்தபுரம், கொச்சி அரசு ஆஸ்பத்திரிகளில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இந்த உடல்களை அடையாளம் காண மாயமான மீனவர்களின் உறவினர்களிடம் டி.என்.ஏ. என்ற மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஏற்கனவே குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த வில்பிரைட்(வயது 55) என்ற மீனவரின் அடையாளம் காணப்பட்டது. உடல்

இந்தநிலையில் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் புதுக்கடை ஆர்.சி.தெருவை சேர்ந்த ஆல்பின் (47), பூத்துறையை சேர்ந்த சர்ஜன் (32), சின்னத்துறையை சேர்ந்த டார்வின், தூத்தூரை சேர்ந்த அல்வாரிஸ், தூத்துக்குடியை சேர்ந்த கிங்ஸ்டன் ஆகிய 5 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களில், ஆல்பினின் உடல் நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு ஜெனோபா என்ற மனைவியும், அபிஷா (20) என்ற மகளும், அபிஷேக் (19) என்ற மகனும் உள்ளனர். நேற்று பூத்துறையை சேர்ந்த சர்ஜன், சின்னத்துறையை சேர்ந்த டார்வின் உடல்களும் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

இதுபோல், தூத்துக்குடியை சேர்ந்த கிங்ஸ்டன் என்பவர் உடல் கோழிக்கோடு ஆஸ்பத்திரியில் அடையாளம் காணப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்பு அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 

Next Story