தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து 2 பெண் சாவு மேலும் 6 பேர் படுகாயம்
தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
துக்க நிகழ்ச்சிக்கு...சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேசன் மகன் கோடீசுவரன் (வயது 55). இவரது உறவினர் தூத்துக்குடி மாவட்டம் பேயன்விளையில் இறந்து விட்டார். அந்த துக்க நிகழ்ச்சிக்காக கோடீசுவரன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு காரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டார். காரை கோடீசுவரனின் மகன் அருண் (27) என்பவர் ஓட்டினார்.
கார், சிப்காட் நாற்கர சாலையில் வந்து கொண்டிருந்தது. அங்கு ரெயில்வே மேம்பால பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது நாற்கர சாலையில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி வேலை முடிந்துள்ளது. மற்றொரு பகுதி வேலை முடியாமல் உள்ளது.
2 பேர் சாவுஅருண் ஓட்டி வந்த கார் பாலம் வேலை முடியாத பகுதியில் சென்றது. திடீரென்று நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.
கோடீசுவரன், அருண் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இறந்த பெண்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்த 6 பேருக்கும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.