நீர்மட்டம் 60 அடியாக குறைந்தது: டெல்டா பாசன தேவையை மேட்டூர் அணை பூர்த்தி செய்யுமா?


நீர்மட்டம் 60 அடியாக குறைந்தது: டெல்டா பாசன தேவையை மேட்டூர் அணை பூர்த்தி செய்யுமா?
x
தினத்தந்தி 5 Jan 2018 4:15 AM IST (Updated: 5 Jan 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடியாக குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர் இருப்பு டெல்டா பாசன தேவையை பூர்த்தி செய்யுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேட்டூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர், திருச்சி, கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் மேட்டூர் அணையின் மூலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த பாசன தேவைக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கு ஏற்ப அதிகரித்தோ, குறைத்தோ ஜனவரி மாதம் வரை திறந்து விடப்படுகிறது.

பெயரளவில் பெய்யும் பருவமழை

ஆனால் தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிய பெய்யும் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய பெய்யும் வடகிழக்கு பருவமழையும், கடந்த சில ஆண்டுகளாக பெயர் அளவில் மட்டுமே பெய்து வருகிறது. பருவமழையை பயன்படுத்தி பாசன தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.

இதன்காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரையே எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது. தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே காவிரி நீரை பங்கீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கர்நாடகம் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரை முழுமையாக அளிப்பது இல்லை.

இதற்கு மாறாக கர்நாடகத்தில் மழை தீவிரம் அடைந்து அங்குள்ள அணைகளில் தன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பிய உடன் தான் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லை பகுதியான பிலி குண்டுலுவை கடந்து மேட்டூர் அணையை வந்தடைகிறது.

காவிரி நதிநீர் ஆணையம்

எனவே தமிழகத்தில் பருவமழை தவறும் நேரங்களில் தமிழகம் காவிரி நீரை பெறுவதில் தனக்குரிய உரிமையை நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தை நாடி வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டும் வழக்கம் போல் பருவமழை தவறியதால் ஜூன் மாதம் 12-ந் தேதி டெல்டா பாசனத்துக்கு திறக்க வேண்டிய மேட்டூர் அணை அக்டோபர் மாதம் 2-ந் தேதி தான் திறக்கப்பட்டது.

அப்போது அணையின் நீர்மட்டம் 94.84 அடியாக இருந்தது. அணையில் இருந்து தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாததால் அணையின் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது.

இந்த மாதம் 28-ந் தேதி வரை டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் அளிக்க வேண்டிய நிலையில் நேற்று அணை நீர்மட்டம் 60 அடியாக குறைந்துள்ளது. இது மட்டுமின்றி கால்வாய் பாசனத்துக்கு இன்னும் 26 நாட்களுக்கு தண்ணீர் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மேட்டூர் அணையின் நீர் இருப்பு டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்துக்கு முழுமையாக தண்ணீர் அளிக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

Next Story