பூந்தமல்லியில் மாநகர பஸ் டிரைவரை தாக்கியவரை கண்டித்து சக ஊழியர்கள் போராட்டம்
பூந்தமல்லியில் மாநகர பஸ் டிரைவரை தாக்கியவரை கண்டித்து, பஸ்களை இயக்காமல் சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,
சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பூந்தமல்லிக்கு நேற்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு மாநகர பஸ் ஒன்று வந்தது. பஸ்சை டிரைவர் பாக்கியநாதன் என்பவர் ஓட்டி வந்தார். பூந்தமல்லி பஸ் நிலையத்துக்குள் பஸ் நுழைந்தபோது முன்னால் சென்ற மொபட் மீது லேசாக உரசியதாக தெரிகிறது.
இதில் மொபட்டில் வந்தவர் நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், எழுந்து வந்து மாநகர பஸ் டிரைவர் பாக்கியநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர், திடீரென பாக்கியநாதனை தாக்கிவிட்டு, தப்பி ஓடிவிட்டார். அவர் ஓட்டி வந்த மொபட்டை அங்கேயே போட்டுச்சென்று விட்டார்.
பஸ் ஊழியர்கள் போராட்டம்
இதை அறிந்த மாநகர பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள், பஸ் டிரைவரை தாக்கியவரை கண்டித்து பஸ்களை இயக்காமல் அப்படியே நிறுத்திவிட்டு பஸ் நிலையத்துக்குள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மாநகர பஸ் ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கினர். இதனால் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறிது நேரம் பஸ் இயக்கப்படாததால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மாநகர பஸ் டிரைவரை தாக்கிய அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story