சர்க்கரை ஆலைகளை முற்றுகையிட்டு தே.மு.தி.க.வினர் போராட்டம் பெண்கள் உள்பட 325 பேர் கைது


சர்க்கரை ஆலைகளை முற்றுகையிட்டு தே.மு.தி.க.வினர் போராட்டம் பெண்கள் உள்பட 325 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2018 4:15 AM IST (Updated: 5 Jan 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

நிலுவை தொகை வழங்காததை கண்டித்து காட்டூர், பெட்டவாய்த்தலை பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலைகளை தே.மு.தி.க.வினர் முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 325 பேரை போலீசார் கைது செய்தனர்.

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த காட்டூர் கோத்தாரி சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை வழங்காததை கண்டித்து தே.மு.தி.க. திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர் தேவராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட கழக செயலாளர் குமார் தலைமை தாங்கினார். லால்குடி நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட கழக துணை செயலாளர் முத்து குமார், ஒன்றிய செயலாளர்கள் தங்கமணி, சதாபார்த்திபன், பாண்டியன், குணசேகரன், லால்குடி ஒன்றிய கழக நிர்வாகி பிரபாகரன், கருப்பையா, முன்னாள் ஒன்றிய செயலாளர் அருள்சேகர்ராஜ், காட்டூர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறை நிரப்பும் போராட்டம்

தே.மு.தி.க பொருளாளர் இளங்கோவன் கலந்து கொண்டு தமிழகத்தில் 36 சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத்தொகை இருந்து வந்தது. தற்போது பல்வேறு மாவட்டங்களில் உள்ள சர்க்கரை ஆலையில் நிலுவைத்தொகை படிப்படியாக வழங்கப்பட்டு தற்போது ஆயிரத்து 200 கோடியாக நிலுவைத்தொகை உள்ளது. இதில் காட்டூர் கோத்தாரி சர்க்கரை ஆலையில் மட்டும் இந்தப்பகுதியில் கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ரூ. 150 கோடி உள்ளது. இப்பகுதி விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்காமல் தமிழக அரசும், கோத்தாரி சர்க்கரை ஆலையும் வஞ்சித்து வருகின்றன. இதனால் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் பின்தங்கியுள்ளது., மேலும் விவசாயிகள் கரும்பு பயிரிட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. நிலுவைத்தொகையை வழங்காவிட்டால் வரும் காலங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என பேசினார்.

175 பேர் கைது

முன்னதாக பல்வேறு ஒன்றியங்களில் இருந்து வந்திருந்த தே.மு.தி.க.வினர் ஆலை முன்பு கோஷமிட்டு முற்றுகையிட முயன்றனர். அப்போது லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணகுமார், சதீஷ்குமார் மற்றும் போலீசார் 20 பெண்கள் உள்பட 175 பேரை கைது செய்தனர்.

பெட்டவாய்த்தலை

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி தெற்கு மாவட்ட தே.மு.தி.க.வினர் பெட்டவாய்த்தலை காவேரி சர்க்கரை ஆலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணகோபால் தலைமை விகித்தார். மாநில தொழிற்சங்கத்தை சேர்ந்த மாதவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் காவேரி சர்க்கரை ஆலை தரவேண்டிய கரும்புக்கான நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்று கோஷமிட்ட படி ஆலையை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றனர். அப்போது பெட்டவாய்த்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலை 5 மணிக்குமேல் அவர்களை போலீசார் விடுவித்தனர். 

Next Story