மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து: பிளஸ்-2 மாணவி தலை நசுங்கி சாவு


மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து: பிளஸ்-2 மாணவி தலை நசுங்கி சாவு
x
தினத்தந்தி 5 Jan 2018 4:30 AM IST (Updated: 5 Jan 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் ‘லிப்ட்’ கேட்டு மோட்டார்சைக்கிளில் சென்ற போது பஸ் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கோனேரிபட்டி கிழக்கு வீதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகள் தாரணி(வயது 17). இவர் தாராபுரம் சர்ச்ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த புள்ளாறு சாமியின் மகள் காவியா. இவர் தாராபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவருகிறார். தோழிகளான இருவரும் நேற்று காலை பள்ளிக்கு செல்வதற்காக, கோனேரிபட்டி பிரிவில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பஸ் வரும் நேரமாகிவிட்டதால், இருவரும் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்த நேரம், தாராபுரத்தில் தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் கோனேரிபட்டியை சேர்ந்த மாணவன் பரத்(15) என்பவர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்துள்ளார். தாரணியும், காவியாவும் பஸ்சை பிடிக்க அவசர, அவசரமாக நடந்து செல்வதை பார்த்த பரத், அவர்களை தனது மோட்டார் சைக்கிளில் பஸ்நிறுத்தத்துக்கு அழைத்து சென்று விட்டுள்ளார்.

அப்போது, அங்கிருந்தவர்கள் வழக்கமாக அந்த நேரத்துக்கு வரும் தனியார் பஸ், முன்கூட்டியே வந்து சென்றுவிட்டதாக கூறியுள்ளனர். பஸ்சை தவற விட்டதால், பள்ளிக்கு தாமதமாக செல்ல நேரிடும் என்று தாரணியும், காவியாவும் கவலையடைந்துள்ளனர். உடனே அவர்கள், பரத்திடம் சென்று, தங்களை அருகே உள்ள எரகாம்பட்டி பிரிவு பஸ்நிறுத்தம் வரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று விடும்படி ‘லிப்ட்’ கேட்டுள்ளனர்.

இதனால், அவர்கள் மீது பரிதாபப்பட்ட பரத், இருவரையும் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு எரகாம்பட்டி பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்புறமாக மோதியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் கீழே விழுந்துள்ளனர்.

சாலையின் வலதுபுறம் விழுந்த தாரணி, பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பரத்தும், காவியாவும், படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், தாரணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் ஓட்டுனரான பெரிச்சிபாளையத்தை சேர்ந்த ரகுபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story