செங்குன்றத்தில் பிணங்களை எரிக்கும் போது வெளியேறும் புகையால் பொதுமக்கள் அவதி


செங்குன்றத்தில் பிணங்களை எரிக்கும் போது வெளியேறும் புகையால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 5 Jan 2018 3:30 AM IST (Updated: 5 Jan 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றத்தில் பிணங்களை எரிக்கும் போது வெளியேறும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

செங்குன்றம், 

செங்குன்றத்தில் உள்ள நவீன எரியூட்டு மயானத்தில் இரும்பு புகை போக்கி குழாய் சேதம் அடைந்து இருப்பதால் பிணங்களை எரிக்கும் போது வெளியேறும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே புகை போக்கி குழாயை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நவீன எரியூட்டு மயானம்

நாரவாரிக்குப்பம்(செங்குன்றம்) பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு பல லட்சம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் யாராவது இறந்து விட்டால் அவர்களின் உடல்களை எரிப்பதற்காக செங்குன்றம்-சோத்துப்பாக்கம் சந்திப்பு அருகே நவீன எரியூட்டு மயானம் உள்ளது. இங்கு பிணங்களை புதைப்பதற்கு அனுமதி இல்லை. தீயிட்டு எரிக்க மட்டுமே முடியும்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த நவீன எரியூட்டு மயானத்தை பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. ஒரு பிணத்தை எரிக்க ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

இந்த நவீன எரியூட்டு மயானத்தில் பிணங்களை எரிக்கும் போது ஏற்படும் புகை வெளியேற வசதியாக சுமார் 150 அடி உயரத்துக்கு இரும்பு குழாயால் ஆன புகைபோக்கி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பிணங்களை எரிக்கும் போது அதில் இருந்து வெளியேறும் புகையானது, இந்த புகைபோக்கி வழியாக மேலே உயரத்துக்கு சென்று வெளியேறி விடுவதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் தெரியாமல் இருந்து வந்தது.

சேதம் அடைந்த புகை போக்கி

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இந்த இரும்பு புகை போக்கி குழாய் சேதம் அடைந்து 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. பிணங்களை எரிக்கும்போது வெளியேறும் புகை, மேலே செல்லாமல் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதி வழியாக வெளியேறி வருகிறது.

இதனால் அந்த பகுதியில் புகை மூட்டமாக காணப்படுவதுடன், துர்நாற்றமும் வீசி வருகிறது. பிணங்களை எரிக்கும்போது வெளியேறும் இந்த புகை அருகில் உள்ள பவானி நகர், கரிகாலன் நகர், பெரியார் நகர், சோத்துப்பாக்கம், பாலவாயில், செங்குன்றம் பேரூராட்சி 1 மற்றும் 2-வது வார்டு ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து கொள்வதால் அங்குள்ள பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

எனவே சேதம் அடைந்த இரும்பு புகை போக்கி குழாயை சீரமைக்குமாறு பேரூராட்சி செயல் அலுவலரிடமும், மாவட்ட கலெக்டரிடமும் பொதுமக்கள் நேரடியாக புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இனியும் கால தாமதம் செய்யாமல் சேதம் அடைந்த இரும்பு புகை போக்கி குழாயை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story