நெல்லை டவுனில் வியாபாரிகள் சாலை மறியல் - கடையடைப்பு
நெல்லை டவுனில் வியாபாரிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கடையடைப்பு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை டவுனில் வியாபாரிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கடையடைப்பு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையோர கடைகள்நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ரதவீதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் வைத்து இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நெல்லை மாநகராட்சி டவுன் உதவி ஆணையாளர் கீதா தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வடக்கு ரதவீதிக்கு நேற்று காலையில் சென்றனர். அங்கு இருந்த சாலையோர கடைகளை அகற்ற முயன்றனர்.
அப்போது அதிகாரிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சாலையோர கடைகளை எடுக்க கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எங்களுக்கு மாற்று இடங்களை கொடுத்து விட்டு கடைகளை அகற்றுங்கள் என்று வியாபாரிகள் கூறினர். பின்னர் ஐகோர்ட்டு நகலை அதிகாரிகளிடம், சிறு வியாபாரிகள் கொடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதை கைவிட்டனர்.
சாலை மறியல்பின்னர் அதிகாரிகள் பெரிய கடைகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். அதற்கு அங்குள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எங்கள் கடைகளுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நடைபாதைகள் கடைகள் இருக்கின்றன. அதை அப்புறப்படுத்துங்கள் என்று கூறினர்.
தொடர்ந்து வியாபாரிகள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கடைகளையும் அடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வியாபாரிகள் மறியலை கைவிட்டு, விட்டு தங்கள் கடைகளையும் திறந்தனர். வியாபாரிகளும், சாலையோர சிறு வியாபாரிகளும் ஒரே இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வியாபாரி சங்க நிர்வாகி பேட்டிஇதுகுறித்து நெல்லை மாநகர வர்த்தக சங்க ஆலோசகர் குணசேகரன் கூறும் போது, “நெல்லை டவுன் பகுதியில் ஜவுளிக்கடை, அழகுசாதன கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. லட்சக்கணக்கில் முதல் போட்டு நாங்கள் தொழில் செய்து வருகிறோம். ஆனால் எங்கள் கடை முன்பு உள்ள இடத்தை ஆக்கிரமிப்பு செய்து நடைபாதை கடைகள் வைத்து இருக்கிறார்கள். இதனால் எங்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது. அந்த கடைகளை அகற்றாமல் எங்கள் கடைகள் முன்பு போடப்பட்டு இருக்கும் கூரைகளை அகற்றுகிறார்கள். ஐகோர்ட்டு உத்தரவு இருப்பதாக கூறுகிறார்கள். அதாவது நகரும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு தான் இந்த ஐகோர்ட்டு உத்தரவு பொருந்தும். அதனால் நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்து இக்கிறோம்“ என்றார்.
மாற்று இடம் வேண்டும்சாலையோர வியாபாரிகளிடம் கேட்ட போது, “சாலையோரங்களில் கடை வைக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. எங்களுக்கு கடை வைக்க ஐகோர்ட்டும் அனுமதி வழங்கியுள்ளது. நெல்லை டவுனில் ஜவுளி, அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்பட 39 கடைகள் இருக்கின்றன. நாங்கள் வியாபாரம் செய்ய மாற்று இடம் கொடுத்தால், கடையை எடுத்து விடுகிறோம்“ என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, “இது வியாபாரிகள் பிரச்சினை. ஐகோர்ட்டு உத்தரவை எங்களிடம் கொடுத்து இருக்கிறார்கள். அதை நாங்கள் படித்து பார்த்து விட்டு, எங்கள் மேல் அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்வோம். இருதரப்பு வியாபாரிகளையும் அழைத்து பேசி சுமூக தீர்வு காண்பதற்கு முயற்சி செய்வோம்“ என்றார். நெல்லை டவுனில் வியாபாரிகள் கடையடைத்து மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.