கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமஸ் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் மூர்த்தி, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் என்.சாரங்கன் ஆகியோர் விளக்கவுரையாற்றினார்கள். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில தலைவர் பி.எல்.சுப்பிரமணி சிறப்புரையாற்றினார்.
இந்த தர்ணா போராட்டத்தில் 8-வது ஊதிய மாற்றத்திற்கான ஐவர் அலுவலர் குழு குறைந்தபட்ச பென்சன் பரிந்துரை செய்திட வலியுறுத்தப்பட்டது. அகவிலைப்படி, மருத்துவப்படி, குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரம், ஈமச்சடங்கு நிதி ரூ.25 ஆயிரம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
முடிவில் மாவட்ட பொருளாளர் கே.ஜெகநாதன் நன்றி கூறினார்.
திருவள்ளூர்
இதே கோரிக்கையை வலியுறுத்தி திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் சண்முகம், ஞானமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயலாளர் சுப்பிரமணி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருள்டேனியல், மாவட்ட பொருளாளர் காந்திமதிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story