தமிழக அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம்: புதுவையில் பயணிகள் தவிப்பு


தமிழக அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம்: புதுவையில் பயணிகள் தவிப்பு
x
தினத்தந்தி 5 Jan 2018 4:15 AM IST (Updated: 5 Jan 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு பஸ் ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தத்தால் புதுவையில் பயணிகள் பரிதவித்தனர்.

புதுச்சேரி,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று மாலை திடீரென்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் அதிக அளவில் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் இங்கும் அதன்பாதிப்பு எதிரொலித்தது. நேற்று மாலை சென்னையில் இருந்து புதுவைக்கு வந்த பஸ்கள் அனைத்தும் புதிய பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேபோல் புதுவையில் இருந்து செல்லும் பஸ்களும் இயக்கப்படவில்லை. ஆனால் சிதம்பரம், கடலூர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்களும், சென்னையில் இருந்து புதுவை வழியாக நாகப்பட்டினம் செல்லும் ஒரு சில பஸ்களும் இயக்கப்பட்டன.

பயணிகள் தவிப்பு

இதேபோல் புதுவையில் இருந்து விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் பஸ் கிடைக்காமல் புதுவை பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது. பஸ்சை தேடி அவர்கள் அங்கும் இங்கும் அலைந்தனர். வெளியிடங்களில் இருந்து புதுவை வழியாக சென்ற ஒருசில பஸ்களில் கூட்ட நெரிசலில் தொங்கியபடி பயணம் செய்தனர். சிலர் ரெயில் நிலையத்திற்கு சென்றனர். ஒரு சில பயணிகள் தங்கள் பயணத்தை கைவிட்டு விடு திரும்பினர். தமிழக அரசு பஸ் ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் புதுவையில் பயணிகள் பெரிதும் தவிப்புக்குள்ளானார்கள். 

Next Story