நடுவானில் மோதல்: பெண் விமானியை கன்னத்தில் அறைந்த விமானி விசாரணைக்கு உத்தரவு


நடுவானில் மோதல்: பெண் விமானியை கன்னத்தில் அறைந்த விமானி விசாரணைக்கு உத்தரவு
x
தினத்தந்தி 5 Jan 2018 4:15 AM IST (Updated: 5 Jan 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

நடுவானில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பெண் விமானிக்கும், ஆண் விமானிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மும்பை,

நடுவானில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பெண் விமானிக்கும், ஆண் விமானிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பெண் விமானியின் கன்னத்தில் ஆண் விமானி அறைந்தார். சம்பவம் குறித்து மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.

மோதல்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து மும்பை நோக்கி சம்பவத்தன்று ஜெட் ஏர்வேஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. அதில் இரண்டு குழந்தைகள் உள்பட 324 பயணிகளும், 14 சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் ஈரான்– பாகிஸ்தான் இடையே நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானிகள் அறையில் இருந்த ஆண் விமானிக்கும், பெண் விமானிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு மோதலாக உருவெடுத்தது.

இதில், ஆவேசம் அடைந்த விமானி, பெண் விமானியின் கன்னத்தில் ‘பளார்’ என ஓங்கி அறைந்தார். இதனால், அதிர்ச்சிக்குள்ளான அவர், விமானிகள் அறையில் இருந்து அழுது கொண்டே வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில், விமானத்தை இயக்கும் பொறுப்பை சிப்பந்திகளிடம் ஒப்படைத்து விட்டு ஆண் விமானியும் வெளியேறினார். விமானம் மும்பை வந்தடைய சுமார் 2¾ மணிநேரம் இருந்த நிலையில், விமானிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணைக்கு உத்தரவு

இந்த விவகாரம் நேற்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுபற்றி பூஜ்ய நேரத்தில் பேசிய பாரதீய ஜனதா எம்.பி., கிரித் சோமையா, ‘‘இந்த சம்பவத்தால் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட இருந்தது. விமானிகள் அறையில் இருந்து இரண்டு விமானிகளும் வெளியேறியது விதிமுறை மீறல். அவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, ‘‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. குறித்த கால வரையறைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதனிடையே, விசாரணை நிறைவடையும் வரையில், இரண்டு விமானிகளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.


Next Story