தஞ்சை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்தம்


தஞ்சை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Jan 2018 4:00 AM IST (Updated: 6 Jan 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் தஞ்சை மாவட்டத்தில் 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர்,

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 13–வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக சென்னையில் அமைச்சருடன் தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்றுமுன்தினம் மாலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தஞ்சை புறநகர், நகர்கிளை–1, நகர்கிளை–2, கும்பகோணம் புறநகர், நகர்கிளை–1, நகர்கிளை–2, ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவையாறு, தஞ்சை விரைவு போக்குவரத்து கழகம், கும்பகோணம் விரைவு போக்குவரத்து கழகம் என 12 பணிமனைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் உள்ள 528 பஸ்களில் சுமார் 89 பஸ்கள் மட்டுமே பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக இயக்கப்பட்டன. இந்த பஸ்களை அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தான் இயக்கினர். அதுவும் சீருடை இன்றி பஸ்களை இயக்கினர்.

தஞ்சை புறநகர் பணிமனையில் 57 பஸ்கள் உள்ளன. இங்கிருந்து நேற்றுகாலை 7.30 மணிக்கு 6 பஸ்கள் வெளியே புறப்பட்டு சென்றது. ஆனால் இவற்றில் 5 பஸ்கள் மீண்டும் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன. இதேபோல பணிமனைகளில் இருந்து வெளியே சென்ற பஸ்களிலும் பல பஸ்கள் மீண்டும் பணிமனைக்கு திரும்பி வந்துவிட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள நகர்கிளை–1, நகர்கிளை–2 ஆகியவற்றில் இருந்து மொத்தம் 3 பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களை அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் இயக்க முன்வந்தபோது மற்ற தொழிற்சங்கத்தினர் பஸ்களை வழிமறித்து இயக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 3 பஸ்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டன. தஞ்சை மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 90 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படாமல் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்த போராட்டத்தினால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தஞ்சை பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்கள் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக மிக குறைந்த அளவிலேயே பயணிகள் கூட்டம் காணப்பட்டது. தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. தஞ்சையில் இருந்து கிராமப்புறங்களுக்கும், புறநகர் பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வந்த மினிபஸ்கள் அனைத்தும் தஞ்சை பழைய, புதிய பஸ் நிலையங்களில் இருந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்த வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்களிலும், மினிபஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சில மினிபஸ்களில் ரூ.4 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். கிராமப்புறங்களில் 5, 6 பேர் இணைந்து ஒரே ஆட்டோவில் கட்டணத்தை பகிர்ந்து கொண்டு பயணம் செய்தனர். மேலும் இருசக்கர வாகனங்களை ஏராளமானோர் பயன்படுத்தினர். மேலும் வழக்கத்தைவிட ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

போக்குவரத்துத்துறை அமைச்சரின் தொழிலாளர் விரோத செயலை கண்டித்தும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இணையாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம்வழங்க வலியுறுத்தியும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.7 ஆயிரம் கோடியை வழங்க வலியுறுத்தியும் தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள நகர்கிளைகள் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை மத்திய சங்க துணைத் தலைவர் ஜெயவேல்முருகன் தலைமை தாங்கினார்.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் துரை.மதிவாணன், சி.ஐ.டி.யூ. நிர்வாகி ராமசாமி, த.மா.கா. தொழிற்சங்க நிர்வாகி சுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி சரவணன், தமிழக மக்கள் முன்னேற்ற தொழிலாளர் சங்க பொருளாளர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோ‌ஷங்கள் எழுப்பினர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 1 மணிநேரத்திற்கு ஒரு முறை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தஞ்சை கரந்தையில் உள்ள புறநகர் பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை மத்திய துணை பொதுச் செயலாளர் அன்பரசன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மத்திய தலைவர் முருகன், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை கிளை செயலாளர் ஏசுராஜன், அனைத்து தொழிலாளர் பாதுகாப்பு பேரவை செயலாளர் சுதர்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. பின்னர் ஆர்ப்பாட்டம் செய்ய கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய போலீசார் அனுமதி கொடுத்தனர்.


Next Story