விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தாசில்தார் அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் முற்றுகை


விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தாசில்தார் அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Jan 2018 4:00 AM IST (Updated: 6 Jan 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கும்பகோணத்தில் தாசில்தார் அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசு தன்னாட்சி கலைக்கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு தங்கும் விடுதி கும்பகோணம் காமராஜர் நகரில் உள்ளது. இந்த விடுதியில் 55 ஆதிதிராவிட மாணவர்கள் தங்கியுள்ளனர்.

இடிந்து விழும் நிலையில் உள்ள விடுதி கட்டிடத்தை சீரமைக்கக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் மாணவர்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் தாசில்தாருக்கு கோரிக்கை மனு அளித்து இருந்தனர். இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் விடுதியின் கட்டிடத்தை சீரமைக்கக்கோரியும், தரமான உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் விடுதி மாணவர்கள் நேற்று காலை கல்லூரிக்கு செல்லாமல் விடுதிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணிநேரத்திற்கு மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் விடுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கல்லூரி முன்பு உள்ள ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் பூங்கொடி மற்றும் விடுதி காப்பாளர் சந்திரசேகரன் ஆகியார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தாசில்தார் மாணிக்கராஜ் மற்றும் அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உதவி கலெக்டர் வந்து தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என எழுத்துபூர்வமாக உத்தரவாதம் தரும்வரை போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவேக் (வயது20) என்ற மாணவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் முற்றுகை போராட்டத்தால் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story