அ.தி.மு.க.வை மீட்க போராடிக்கொண்டு இருக்கிறோம் டி.டி.வி.தினகரன் பேட்டி
தேர்தல் ஆணையம் தவறானவர்களிடம் கட்சியை கொடுத்து விட்டது. எனவே, அ.தி.மு.க.வை மீட்க போராடிக்கொண்டு இருக்கிறோம் என்று, டி.டி.வி.தினகரன் கூறினார்.
மதுரை,
ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன், மதுரையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
“பஸ்கள் ஓடாததால் மக்கள் சிரமப்படுகிறார்கள். போக்குவரத்துக் கழக ஊழியர்களும் சிரமப்படுகிறார்கள். அதில் அரசு மெத்தனமாகவும், ஆணவப்போக்குடனும் இருக்கிறது. தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது தான். இந்த பிரச்சினைக்கு எல்லாம் காரணம் எடப்பாடியின் ஆட்சி. கடந்த பட்ஜெட்டில் கூட எடப்பாடி பழனிசாமி போக்குவரத்து துறைக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை.
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிற்கு முதல்–அமைச்சராக செயல்படுவது இல்லை. அவர் நெடுஞ்சாலைத்துறைக்கும், பொதுப்பணித்துறைக்கும் தான் அமைச்சராக செயல்படுகிறார். இந்த 2 துறைகளுக்கும் மட்டும் அதிக அளவில் நிதி ஒதுக்குகிறார். மற்ற துறைகளை கண்டு கொள்வதில்லை. கடந்த ஆண்டு போக்குவரத்து துறைக்கு வெறும் ரூ.1000 கோடி ஒதுக்கி இருக்கிறார். வரவுக்கும்–செலவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டுத் தொகையை ஒதுக்கி இருக்க வேண்டும்.
மக்கள் பாதிக்கப்படாத வகையில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும். தற்போது நடைபெறும் ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி இல்லை என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அதற்கு உரமேற்றும் வகையில் தான் தற்போதைய அரசின் அனைத்து செயல்பாடுகளும் உள்ளன.
தி.மு.க. ஆட்சி காலத்திலேயே போக்குவரத்து பணிமனைகள் அடமானம் வைக்கப்பட்டன என்று அரசு சொல்வது தவறு. ஏனென்றால், தி.மு.க. அப்படி இருந்ததால் மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவர்கள் செய்தார்கள், நாங்களும் செய்தோம் என்ற வாதம் ஏற்புடையதல்ல.
ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையை தோற்கடிக்க எல்லா அமைச்சர்களும் அங்கு வந்து முகாமிட்டார்கள். ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் என ரூ.160 கோடி செலவு செய்தார்கள். போக்குவரத்து தொழிலாளர்களும் தேர்தலில் ஓட்டு போடுகிறவர்கள் தான். தேர்தலின் போது அவர்கள் வீட்டிற்கு சென்று திருட்டுத் தனமாக ரூ.6 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என கொடுத்ததற்கு பதிலாக தற்போது அவர்களின் பிரச்சினையை சரியாக தீர்த்து வைத்திருக்கவேண்டியது பழனிசாமியின் கடமை. அவர் இது என் வேலை இல்லை என்று விட்டு, விட்டு, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் அதிக நிதி ஒதுக்கி அதில் இருந்து 15 அல்லது 20 சதவீத கமிஷன் பெற்று ஆதாயம் அடைகிறார் என்று பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
பொதுமக்களின் இந்த குற்றச்சாட்டு உண்மை இல்லை என்றால், எடப்பாடி பழனிசாமி அனைத்து துறைகளுக்கும் அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
தற்போது நடைபெறுவது மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி. செங்கோட்டையனுக்கு பதில் அவை முன்னவராக ஓ.பன்னீர் செல்வத்தை போட்டு இருப்பதால் என்ன நடந்து விடப் போகிறது? ஓ.பன்னீர்செல்வத்தை போட்டதால் சட்டசபையை அவர் கட்டிப் பிடித்து விடப்போகிறாரா? காவு கேட்கப் போகிறாரா? செங்கோட்டையனை அசிங்கப்படுத்துவதற்காக செய்து இருக்கிறார்கள். பதவியை காப்பாற்ற 2 துரோகிகளின் நடவடிக்கை தான் இது.
நாங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று மக்களை சந்திக்கப் போகிறோம். சட்டமன்ற தேர்தல் எந்த நேரமும் வரும் என்பதால் எனது தொடர் சுற்றுப்பயணம் தொடரும். தனிக்கட்சி தொடங்கப் போகிறோம் என்பது வதந்தி. எங்கள் கட்சியில் உரிமைக்காகப் போராடுகிறோம். தேர்தல் ஆணையம் தவறானவர்களிடம் கட்சியை கொடுத்து விட்டது. அதை மீட்பதற்காக போராடிக் கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு தினகரன் கூறினார்.