நடிகர் கமல் விரக்தியில் பேசுகிறார் மதுரையில் டி.டி.வி. தினகரன் பேட்டி
நடிகர் கமல் விரக்தியில் பேசுவதாக மதுரையில் டி.டி.வி. தினகரன் கூறினார்.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சாமி தரிசனம் செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
அ.தி.மு.க. அரசு பெயருக்கு மட்டுமே நடந்து வருகிறது. தமிழக அரசு தற்போது செயலிழந்து விட்டதாக நீதிபதி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பே தமிழக அரசு செயலிழந்து விட்டது. யாருடைய பிரச்சினைகள் குறித்தும் அரசுக்கு அக்கறை இல்லை. போக்குவரத்து தொழிலாளர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர், பேஸ்புக்கில் மட்டுமே மக்களை சந்திக்கிறார், அரசியல் செய்கிறார். டுவிட்டரில் யார் வேண்டுமானாலும் அரசியல் நடத்தலாம். ஆர்.கே.நகர் தேர்தலை அவர் நேரில் பார்க்கவில்லை.
இந்தநிலையில், ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்து தவறானது. அவர் விரக்தியில் பேசுகிறார். என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் பேசுகிறார். இதன் மூலம் அவரது தரத்தை அவரே குறைத்துக் கொள்கிறார்.
ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்பதற்காகவே சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுள்ளேன். மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன். அமைச்சர்கள் அனைவரும் பங்காளிகள் தான். அதனால் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளில் எந்தவிதபாதிப்பும் ஏற்படாது. எப்படி எல்லாம் போராடி மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை நன்கு அறிந்திருக்கிறேன்.
என் தொகுதியின் வளர்ச்சிக்கு ஜனநாயக முறைப்படி போராடுவேன். ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய விளையாட்டு. அதனை வியாபாரமாக மாற்றக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.