மதுரையில் போக்குவரத்து ஊழியர்களிடையே மோதல் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று 2–வது நாளாக நீடித்தது.
மதுரை,
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று 2–வது நாளாக நீடித்தது. மதுரையை பொறுத்தமட்டில், 90 சதவீத பஸ்கள் நேற்றும் இயக்கப்படவில்லை.
போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஒரு சில தொழிற்சங்க ஊழியர்கள், பஸ்களை இயக்குவதற்காக அதிகாலை நேரத்தில் அந்தந்த பணிமனைகளுக்கு வந்தனர். அப்போது பணிமனை முன்பு திரண்டிருந்த மற்ற தொழிற்சங்க ஊழியர்கள் பஸ்களை இயக்க விடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரையில் உள்ள பல பணிமனைகள் காலையில் இருந்தே போர்க்களமாக காட்சி அளித்தன.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பணிமனையிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. பஸ்சை இயக்குவதற்காக வந்த ஊழியர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர்.
இதுபோல், எல்லீஸ்நகர் பணிமனையில் இருந்து பஸ்களை வெளியே எடுக்காத வண்ணம் போக்குவரத்து தொழிலாளர்கள் அதிகாலை 3 மணிக்கே, பணிமனை வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். நீண்டநேர பேச்சு வார்த்தைக்கு பின், ஒரு சில பஸ்களை மட்டும் வெளியே எடுத்துவர அனுமதி அளிக்கப்பட்டது.