பணகுடி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதல்: போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகன் பலி சுற்றுலா சென்றபோது நேர்ந்த பரிதாபம்
பணகுடி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராதாபுரம்,
பணகுடி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார். நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
நண்பர்களுடன் சுற்றுலாநெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்தவர் பட்டன். இவர் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் தங்கமுத்து(வயது 23). டிப்ளமோ படித்து உள்ள இவர், தனது நண்பர்களான வி.எம்.சத்திரத்தை சேர்ந்த மகாராஜன்(18), சிவந்திபட்டியை சேர்ந்த சந்தனகுமார்(20), குறிச்சிகுளத்தை சேர்ந்த வழஜி(19), கோட்டையப்பன்(20) ஆகிய 4 பேருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.
அதன்படி நேற்று தங்கமுத்து உள்பட 5 பேரும் ஒரு காரில், கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனர். காரை தங்கமுத்து ஓட்டினார்.
லாரி மீது கார் மோதியதில் பலிகாலை 7 மணியளவில் அவர்கள் சென்ற கார். பணகுடியை அடுத்த காவல்கிணறு அருகே உள்ள ஆவரைகுளம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் ஒரு டேங்கர் லாரி சென்றது. தங்கமுத்து அந்த லாரியை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கார், லாரியின் பின்பகுதியில் மோதியது.
இதில் நிலைதடுமாறிய கார், கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள குளத்துக்குள் பாய்ந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த தங்கமுத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேரும் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
போலீசார் மீட்டனர்இதனை அந்த பகுதியில் வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து உடனடியாக பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த மகாராஜன் உள்பட 4 பேரையும் மீட்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தங்கமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.