சாமளாபுரம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் மறியல்


சாமளாபுரம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 6 Jan 2018 3:00 AM IST (Updated: 6 Jan 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

சாமளாபுரம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

மங்கலம்,

சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வி.அய்யம்பாளையம் கிராமத்தில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்களும், கூலி தொழிலாளர்களும் வசித்து வருகிறார்கள். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்து செல்வார்கள்.

ஆனால் வி.அய்யம்பாளையத்தில் இருந்து அய்யன்கோவில் வழியாக பெத்தாம் பூச்சிபாளையம் வரை சுமார் 1 கிலோ மீட்டர் தார் சாலை மிகவும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் வாகனங்களில் செல்லும் போது வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், இந்த சாலையில் கீழே விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

எனவே இந்த சாலையை சீரமைக்கக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை 10 மணி அளவில் வி.அய்யம்பாளையம் பஸ்நிறுத்தம் முன் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பல்லடம் தாசில்தார் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் பபிதா, கிராம நிர்வாக அதிகாரி குமரேஷ், மண்டலதுணை தாசில்தார் மயில்சாமி மற்றும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி அதிகாரிகளிடம் கொடுத்தனர். அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட சாலையை நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


Next Story