போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை


போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Jan 2018 4:15 AM IST (Updated: 6 Jan 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

சேலம்,

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சேலம் மாவட்டத்தில் நேற்று 2–வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி சேலம் புதிய பஸ்நிலையத்தை கலெக்டர் ரோகிணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பஸ் பயணிகளிடம் ஏதேனும் சிரமங்கள் இருக்கிறதா? என்று கேட்டறிந்தார். இதையடுத்து கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:–

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 86 சதவீத பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மதியத்திற்குள் 90 சதவீத பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தொலைதூர பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களை வைத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இதுவரை எந்த புகார்களும் வரவில்லை. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நெரிசலின்றி பயணம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story