கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக வேலைநிறுத்தம்


கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 6 Jan 2018 4:00 AM IST (Updated: 6 Jan 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள் ஓடாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

கடலூர்,

13–வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை உடனே முடித்து, புதிய ஊதியத்தை நிர்ணயிக்க கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினரும் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். பல முறை பேச்சுவார்த்தை நடந்தும் இதற்கான தீர்வு கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் இது தொடர்பாக சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் மாலை வரை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் பஸ்களை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

இதனால் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 6 மணிக்கு பிறகு அரசு பஸ்கள் ஓடவில்லை. கடலூர் பஸ் நிலையத்துக்கு வந்த அனைத்து பஸ்களும் அந்தந்த பணிமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி கடலூர் பணிமனைக்குட்பட்ட அரசு பஸ்களை டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிமனையில் நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

நேற்று 2–வது நாளாக மாவட்டம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூரில் 2 பணிமனைகளில் இருந்தும் அரசு பஸ்கள் எதுவும் வெளியே செல்ல வில்லை. ஆனால் தனியார் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. இவற்றில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மினி பஸ்களும் இயக்கப்பட்டன. வழித்தடங்களை மீறி சென்னை போன்ற தொலைதூரங்களுக்கும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றில் ஒரு சில பஸ்களில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

கிராமப்புறங்களில் இருந்து அரசு டவுன் பஸ்களில் பள்ளிக்கூடம் வரும் மாணவ– மாணவிகள் அரசு பஸ்கள் ஓடாததால் கடும் அவதி அடைந்தனர். சிலர் ஆட்டோக்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் வந்தனர். இதனால் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களிலும் கூட்டம் அலைமோதியது. மதியம் 1.30 மணிக்கு பிறகு கடலூர், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் என்று மாவட்டம் முழுவதும் ஒரு சில அரசு பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், வடலூர் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 11 பணிமனைகளிலும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மாற்று பஸ்களையும் சேர்த்து 630 பஸ்கள் உள்ளன. அவற்றில் 574 பஸ்கள் இயங்கி வந்தன. தற்போது இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மதியம் 1.30 மணி வரை 136 பஸ்கள் மட்டுமே ஓடியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாவட்டம் முழுவதும் 247 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 130 மாற்று பஸ்கள் உள்ளன. இவை அனைத்தும் நேற்று பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டன. அதேபோல் மாவட்டம் முழுவதும் 170 மினி பஸ்களும் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

விருத்தாசலத்தில் உள்ள பணிமனைகளிலும் ஏராளமான பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஒருசில பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. நேற்று காலை 11 மணிக்கு பணிமனைக்கு வந்த பஸ்சை, மீண்டும் அங்கிருந்து இயக்கி செல்லுமாறி அந்த பஸ்சின் டிரைவருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதற்கு அங்கிருந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை கண்டித்து பணிமனை முன்பு திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.


Next Story