அறுவடை காலம் தொடங்கியதால் செங்குன்றத்துக்கு நெல் வரத்து அதிகரிப்பு


அறுவடை காலம் தொடங்கியதால் செங்குன்றத்துக்கு நெல் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Jan 2018 4:30 AM IST (Updated: 6 Jan 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

அறுவடை காலம் தொடங்கியதால் செங்குன்றத்துக்கு நெல் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் நெல் மற்றும் அரிசி விலை குறைந்து உள்ளது.

செங்குன்றம், 

செங்குன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 200-க்கும் மேற்பட்ட நெற்களங்கள் உள்ளன. செங்குன்றம் பகுதியில் உள்ள அரிசி ஆலைகளில் தயாரிக்கப்படும் அரிசி மூட்டைகள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வியாபாரம் நடைபெறுகிறது. இந்த அரிசி ஆலைகளை நம்பி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

செங்குன்றத்துக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என வெளி மாநிலங்களில் இருந்தும் 500-ல் இருந்து 550 லாரிகளில் நெல் மூட்டைகள் வந்து கொண்டிருந்தன.

நெல் வரத்து அதிகரிப்பு

தற்போது அறுவடை காலம் தொடங்கி உள்ளதால் தினந்தோறும் 500-ல் இருந்து 750 லாரிகளில் நெல் மூட்டைகள் வரத்தொடங்கி உள்ளது. நெல் வரத்து அதிகரித்து உள்ளதால் ரூ.600-ல் இருந்து 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நெல் மூட்டைகளின் விலையும் குறைந்து, தற்போது ரூ.500-ல் இருந்து 550 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதனால் பி.பி.டி, அதிசயபொன்னி, ஏ.டி.டி. 43, ஏ.டி.டி. 37, இட்லி குண்டு அரிசி, இட்லி சி.ஆர்.அரிசி, உபானி, என்.எல்.ஆர். ஆகிய அரிசி வகைகளின் விலையும் 1 கிலோ 50 காசில் இருந்து 1 ரூபாய் வரை குறைந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க சம்மேளன தலைவர் டி.துளசிங்கம் கூறும்போது, “தற்போது அறுவடை காலம் என்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட தற்போது நெல் வரத்து கூடியுள்ளது. இதனால் அரிசி விலையும் குறைந்துள்ளது. அரிசி தற்போது போதுமான அளவுக்கு இருப்பு உள்ளது. மத்திய, மாநில அரசுகள் அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்தால் விவசாயிகள், அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் அதை சார்ந்துள்ள தொழிலாளர்கள் நன்மை பெறுவார்கள்” என்றார். 

Next Story