ஊரப்பாக்கம் ஊராட்சி தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பை நிரந்தர தீர்வு கிடைக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


ஊரப்பாக்கம் ஊராட்சி தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பை நிரந்தர தீர்வு கிடைக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 6 Jan 2018 3:30 AM IST (Updated: 6 Jan 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

ஊரப்பாக்கம் ஊராட்சி தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

வண்டலூர், 

சென்னை புறநகர் பகுதியான ஊரப்பாக்கம் ஊராட்சி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் குறைந்த அளவு குடியிருப்புகள் கொண்ட சிறிய கிராமமாக இருந்தது. ஆனால் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து உள்ள ஊரப்பாக்கம் ஊராட்சியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், சிறிய தொழிற்சாலைகள் போன்றவை அதிக அளவில் காணப்படுகிறது. ஊரப்பாக்கம் ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இதன் காரணமாக ஊரப்பாக்கம் ஊராட்சியில் வீட்டு குப்பைகள், ஓட்டல் கழிவுகள், காய்கறி கழிவுகள் உள்பட அனைத்துவிதமான கழிவுகள் தினமும் சுமார் 8 டன் அளவிற்கு சேர்ந்து விடுகிறது. இப்படி சேரும் குப்பைகள் ஒவ்வொரு தெருவிலும், சாலைகளிலும், குடியிருப்புகள் மத்தியில் உள்ள காலி இடத்திலும் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் தினமும் அள்ளுவது கிடையாது. மாறாக குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. மேலும் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாதல் சாலையில் நடந்து செல்லும்போது பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும், மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. குப்பை தேங்கி கிடக்கும் இடத்தை சுற்றி பொதுமக்கள் வாழ்ந்து வருவதால் தொற்று நோய்கள் ஏற்படுகிறது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

சென்னை புறநகரை ஒட்டியுள்ள ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சரியான முறையில் செயல்படுத்துவது கிடையாது என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. இதே நிலை தான் ஊரப்பாக்கம் ஊராட்சியிலும் தொடருகிறது. வீடுகளில் சேரும் குப்பைகளை பொதுமக்களிடம் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வாங்குவதற்கு ஊரப்பாக்கம் ஊராட்சியில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கும் குப்பையை விட மக்காத குப்பைகள் அதிகளவில் சேர்ந்து விடுகிறது. அப்படி சேரும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் தனியாக பிரிப்பதும் இல்லை. இதனால் தினமும் சேரும் குப்பைகளை அள்ளி எங்கு கொட்டுவது? என்ன செய்வது? என்று தெரியாமல் தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் பொதுமக்களுக்கு உடல் நிலையில் பிரச்சினைகள் ஏற்படுகிறது.

துப்புரவு பணியாளர்கள் குறைவு

ஊரப்பாக்கம் ஊராட்சியில் தினமும் 8 டன் குப்பை கழிவுகள் சேருகிறது. இதனை அள்ளுவதற்கு போதிய அளவில் துப்புரவு பணியாளர்கள் இல்லை. தற்போது மொத்தம் 18 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் முடிந்த அளவிற்கு குப்பைகளை அகற்றி வருகின்றனர்.

தற்போது குப்பைகளை அள்ளுவதற்கு 3 வாடகை டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவில் வரி வருவாய் ஈட்டும் ஊராட்சியாக இருந்தாலும், துப்புரவு பணியாளர்களை அதிகரிக்கவும், சொந்தமாக டிராக்டர் வாங்குவதற்கும் ஏன் அதிகாரிகள் முன்வரவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது.

புதிதாக வாங்கிய குப்பை தொட்டிகள்

ஊராட்சியில் தினமும் அதிகமாக குப்பைகள் சேருகிறது. குப்பைகளை பொதுமக்கள் சாலையிலே கொட்டிவிடுகின்றனர் என்பதால் ஒவ்வொரு தெருவிலும் வைப்பதற்காக தூய்மை பாரத இயக்கம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சக்கரம் பொருத்தப்பட்ட 20-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளது.

மேலும் குப்பைகளை அள்ளுவதற்காக 3 சக்கர சைக்கிள்களும் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இவைகள் அனைத்தும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இன்னும் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உரம் தயாரிக்க நடவடிக்கை

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பற்றி ஊராட்சி நிர்வாகம், தனி அலுவலர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக வழி முறைகளை பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும், வீடு தோறும் தினமும் சேரும் குப்பைகளை பொதுமக்களிடம் இருந்து பிரித்து வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தினமும் சேரும் குப்பைகளை அள்ளுவதற்கு போதிய அளவில் துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

குப்பைகளை ஏற்றி செல்வதற்கு சொந்தமாக புதிய டிராக்டர்களை வாங்க வேண்டும், தினமும் அள்ளப்படும் குப்பைகளை பிரித்து அதில் இருந்து உரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், குப்பைகளை கொட்டுவதற்கும், தரம் பிரிக்கவும் நிரந்தரமாக ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும், இவ்வாறு செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் ஊரப்பாக்கம் தூய்மையான ஊராட்சியாக மாறுவதற்கு வழிவகை ஏற்படும்.

முழு ஒத்துழைப்பு

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

ஊரப்பாக்கம் ஊராட்சியில் தினந்தோறும் சேரும் குப்பைகளை அள்ளுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்கள் அனைவரும் ஊராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தருவதற்கு தயாராக இருக்கிறோம். இந்த பிரச்சினைக்கு மாவட்ட கலெக்டர் உடனடியாக நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினார்கள்.

அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

ஊரப்பாக்கம் ஊராட்சி தற்போது அதிக அளவு மக்கள் தொகை கொண்ட பகுதியாக மாறிவிட்டது. இதனால் தினமும் ஏராளமான குப்பைகள் சேர்ந்துவிடுகிறது. இதனை தினமும் அள்ளுவதற்காக முயற்சிகளை எடுத்து வருகிறோம், தினமும் அள்ளப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாமல் திணறி வருகிறோம். இதற்கு நிரந்தரமாக தீர்வு காண்பதற்காக மாவட்ட கலெக்டரிடம் இடம் ஒதுக்கி தரும்படி கேட்டு வருகிறோம், குப்பை கொட்டுவதற்கு நிரந்தரமாக இடம் கிடைத்துவிட்டால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மிக சிறப்பாக செய்வதற்கு வழிவகை ஏற்படும். அப்போது பொதுமக்களிடம் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து வாங்கப்படும், துப்பரவு பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

குப்பை தொட்டிகளில் போடவேண்டும்

மேலும் ஊராட்சிக்கு சொந்தமாக டிராக்டர் வாங்கினால் செலவுகள் அதிகமாகும். ஆகையால் சொந்தமாக டிராக்டர் வாங்க முடியாது. பொதுமக்களும் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை தெருவில் உள்ள குப்பை தொட்டிகளில் போட வேண்டும், ஆனால் பலர் சாலை ஓரத்திலேயே வீசிவிட்டு செல்கின்றனர். எந்த ஒரு திட்டமும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும். ஆகவே குப்பை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் முழு ஆதரவு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story