கன்னியாகுமரி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி
கன்னியாகுமரி அருகே ஏ.டி.எம். மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கொள்ளையனின் உருவத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே லீபுரம், ஆரோக்கியபுரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் அருகிலேயே அதன் ஏ.டி.எம். மையமும் அமைக்கப்பட்டு உள்ளது.
நேற்று காலை இந்த ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்கச் சென்ற ஒரு வாடிக்கையாளர் ஏ.டி.எம். எந்திரம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
லாக்கர் தப்பியது
உடனே வங்கி அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். அங்கு ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்படவில்லை. இதனால், அதில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.
பின்னர், இதுபற்றி கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
கண்காணிப்பு கேமரா
மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியையும் போலீசார் போட்டு பார்த்தனர். அதில், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு ஒரு வாலிபர் ஹெல்மெட், கையுறை அணிந்த நிலையில் ஏ.டி.எம். எந்திரத்தை இரும்பு கம்பியால் உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அவர் கம்பியால் எந்திரத்தின் மேல் கதவை உடைத்துவிட்டு லாக்கரை உடைக்க முயன்றார். நீண்ட நேரம் போராடியும் லாக்கரை உடைக்க முடியவில்லை. இதையடுத்து அவர் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றார்.
இந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story