வேட்டி கலாசாரம் வீழும் முன் மீட்போம்!


வேட்டி கலாசாரம் வீழும் முன் மீட்போம்!
x
தினத்தந்தி 6 Jan 2018 12:00 PM IST (Updated: 6 Jan 2018 10:43 AM IST)
t-max-icont-min-icon

வேட்டி தமிழர் பாரம்பரியத்தின் அடிப்படை. இது தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும், ஆண்களின் மானம் காக்கும் ஆடையாகும். தொன்று தொட்டு தமிழர்கள் வேட்டி அணியும் பழக்கத்தை வழக்கத்தில் வைத்து உள்ளனர்.

சட்டை அணியும் பழக்கம் வரும் முன்பே வேட்டியை மட்டும் கட்டிக்கொண்டு நம் முன்னோர் கர்ஜிக்கும் சிங்கமாய் வலம் வந்தனர்.

தற்போது, படிப்படியாக வேட்டி அணியும் பழக்கம் மங்க தொடங்கி இருக்கிறது. இப்போதெல்லாம் வேட்டிக் கட்டினால், அது பெரிய விஷயமாக, நூதனமாக பார்க்கப்படுகிறது. பண்டிகை காலங்களிலும், விழாக்களிலும், கோவில் திருவிழாக்களிலும் மட்டுமே அத்திப்பூத்தாற் போன்று அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிலர் வேட்டிகளில் தோன்றுவதை காண முடிகிறது.

முன்பெல்லாம், பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து தான் ஆண்கள் மணமேடையை அலங்கரிப்பார்கள். இன்றைக்கோ, மணமகன்கள் கோர்ட்டு, ஷூட்டுகளில் தான் பெரும்பாலும் காட்சி தருகிறார்கள். நம்மிடம் தொற்றி இருக்கும் மேற்கத்திய கலாசாரம், நம் கலாசாரத்தை அழிவு பாதையில் வீறு நடைப்போட செய்துள்ளது. மேலை நாட்டவர்கள் குளிர் பிரதேசத்தில் வசிப்பதால், கோர்ட்டு, ஷூட்டுகளை தங்களுக்கு ஏற்ற உடையாக கருதுகிறார்கள். ஆனால், நாம் வசிக்கும் தமிழகமோ குளிர் பிரதேசம் அல்ல. இங்கே, அந்த கோர்ட்டு, ஷூட்டுக்கெல்லாம் அவசியம் இல்லை.

முதலில் வேட்டி நம் அடையாளம் என்பதை மனதில் நிறுத்த வேண்டும். பருத்தி நூலில் நூற்கும் வேட்டியை நம் முன்னோர்கள் கட்டி வந்தனர். வேட்டியில், முகூர்த்த வேட்டி, தற்காப்பு கலை வேட்டி, பட்டு வேட்டி, பூஜை வேட்டி, சாதாரண வேட்டி என பல வகை உண்டு. ஒவ்வொரு குடும்ப பாரம்பரியத்துக்கு தக்கவும் வேட்டிகள் மாறுபடும். இதை வேட்டி கரையின் வண்ணம் வெளிப்படுத்தும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தக்க வேட்டியின் கரை மஞ்சள், பச்சை, நீலம், காவி என வேறுபடும்.

வேட்டி கட்டுவதால் ஆபத்துகள் விலகி நிற்கும். ஒவ்வொரு வகையான வேட்டிக்கும் வெவ்வேறு வகையான நன்மைகள் உண்டு. பழைய காலங்களில் ஒருவர் கட்டி இருக்கும் வேட்டி, அவரை அடையாளப்படுத்துவதாகவும் திகழ்ந்தது. தற்காப்பு கலை வேட்டி என்பது வழக்கமாக மடித்து கட்டுவதை போன்றது அல்ல. இந்த வகையான வேட்டியை லங்கோடு என்று அழைப்பார்கள். இதை கட்டிக்கொண்டு சண்டைப்போடுவது ஆண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும். இந்த வேட்டிக்கு மேலே சாதாரண வேட்டியை கட்டுவார்கள். இதை முழங்கால் தெரியும்படி கட்டுவது வழக்கம். இந்த வேட்டியை யாராவது கட்டி இருந்தால், அவர்கள் சண்டை பயிற்சி கற்றவர்கள் என்பதை அவர்கள் சொல்லாமலேயே தெரிந்துகொள்ளலாம். வேட்டியின் நாலாபுறமும் கோடு இருந்தால், அதை கட்டி இருப்பவர் தனக்கு யாருடைய தயவும் தேவையில்லை என்பதை வெளிப்படுத்துகிறார் என்று அர்த்தம்.

சிவனை வழிபட கரையில்லா வெள்ளை வேட்டி, விஷ்ணுவை தரிசிக்க மஞ்சள் நிற வேட்டி, அம்மனை வேண்ட சிவப்பு நிற வேட்டி, அனுமனை ஜெபிக்க காவி நிற வேட்டி என ஆன்மிக நேரங்களில் கட்டி வந்தனர். வேள்வியின்போது இதே நிற வேட்டிகளுடன் அகன்ற பட்டு கரை வேட்டி அணிவார்கள்.

இதே போல, பட்டு வேட்டியை திருமணம் போன்ற விழாக்களுக்கு கட்டுவார்கள். ஏனென்றால் அந்த விழாக்களில் நூற்றுக்கணக்கானோர் வந்திருப்பார்கள். இந்த வேட்டி கட்டினால், மற்றவர்களின் வியர்வை, ஒவ்வாமை நம்மை பாதிக்காது. இதே போல அங்கே நிலவும் வெப்ப காற்றும் தீண்டாது. மணமேடையில் இருக்கும் மாப்பிள்ளை கட்டுவதை முகூர்த்த வேட்டி என்பார்கள். அதுவும் பெரும்பாலும் பட்டு வேட்டியாகத்தான் இருக்கும். இது அவருக்கு புது நம்பிக்கையை தரும். எளிதில் தீப்பற்றாததாகவும் இருக்கும். திருமணத்துக்கு முந்தைய நிச்சயதார்த்தத்துக்கு என்றும் தனியாக வேட்டி உண்டு.

இதே போல இறுதி ஊர்வலத்தின் போது இறந்தவருக்கு வெள்ளை வேட்டி அணிவிக்கப்படும். அவருடைய மகன்களும் வெள்ளை வேட்டியே அணிய வேண்டும். வேறு வேட்டி அணிய கூடாது என்ற நடைமுறை உண்டு. காட்டுக்குள் வேட்டையாட அல்லது இதர தேவைக்காக செல்லும் ஆண்கள் கருப்பு நிறத்தில் வேட்டி அணிவர். காரணம், கருப்பு நிற வேட்டியை கண்டால் விஷ உயிரினங்கள் அண்டாது என்ற நம்பிக்கை இருந்தது.

பழைய காலத்தில் உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருந்தார்கள். விவசாயமும், உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் மட்டுமே பிரதானமாக இருந்தது. அப்படி வேலை செய்யும்போது சாதாரண வேட்டி அணிவது காற்றோட்டமாகவும், உடலுக்கு உகந்ததாகவும் இருக்கும். பொதுவாகவே வேட்டி அணிவதால் தீ விபத்துகளில் இருந்து தப்பிக்க முடியும். தீப்பற்றினால் வேட்டி மட்டுமே எரியும். உடலில் தீப்பற்றுவதற்குள் தப்பி விடலாம். ஆனால், இன்றைக்கு நாம் அணியும் துணிகள் அத்தகையது அல்ல.

நாம் வேட்டியால் விளையும் நன்மைகளை மறந்துவிட்டோம். நம் பாரம்பரியத்தை மறந்துவிட்டோம். மேற்கத்திய கலாசாரம் தொற்றி இருப்பதால், நவீன காலத்தில் வித, விதமான உடைகளை அணிய தொடங்கி விட்டோம். ஜூன்ஸ் போன்ற நவீன கால உடைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்குமே தவிர நன்மையை தேடித்தர வல்லவை அல்ல. வேட்டி தான் எப்போதும் நமக்கு பாதுகாப்பு. எனவே, வேட்டி தினமான இன்று (ஜனவரி 6-ந்தேதி) நம் பாரம்பரியம் போற்றும் வேட்டி கட்டுவதை வழக்கத்தில் கொள்வோம். மெல்ல மடியும் வேட்டி கலாசாரத்தை வீழும் முன் மீட்போம்.

-கே.பி.அர்ஜூனன்

Next Story