‘தகனம்’ செய்யப்பட்டவர் திரும்பி வந்தார்!


‘தகனம்’ செய்யப்பட்டவர் திரும்பி வந்தார்!
x
தினத்தந்தி 6 Jan 2018 1:15 PM IST (Updated: 6 Jan 2018 12:09 PM IST)
t-max-icont-min-icon

தாய்லாந்தில் இறந்ததாக ‘தகனம்’ செய்யப்பட்டவர், 7 மாதங்களுக்குப் பிறகு திரும்பிவந்து குடும்பத்தினரை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.

தாய்லாந்தின் பான் லாவோ பாய் பகுதியில் வசித்து வந்தவர், சாக்கோர்ன் சசீவா. 44 வயதாகும் சசீவா, ஜீரணக் கோளாறு காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் ஒருநாள் திடீரென மாயமானார்.

அதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில் ஒருநாள், சசீவாவின் உடல் கிடைத்திருப்பதாகவும், அதை அடையாளம் கண்டு பெற்றுக்கொள்ளுமாறும் அவரது குடும்பத்துக்குத் தகவல் வந்தது.

போலீசாரை சந்தித்த குடும்பத்தினர், குறிப்பிட்ட உடல் சசீவாவினுடையதுதான் என்று ஒப்புக்கொண்டதால் அவர்கள் முன்னிலையில் அந்தச் சடலம் தகனம் செய்யப்பட்டது.

ஆனால் குடும்பத்தினருக்கு திகைப்பூட்டும் வகையில் சசீவா சமீபத்தில் வீடு திரும்பிவிட்டார். அவர்கள் அதை நம்பாததுடன், பேய் என்றும் நினைத்துப் பயந்திருக்கின்றனர்.

ஆனால் சசீவா தெளிவாக விளக்கிச் சொல்லியிருக்கிறார். வீட்டை விட்டுச் சென்ற நாள் முதல் தான் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், அக்காலகட்டத்தில் தமது அடையாள அட்டையை மியான்மர் தொழிலாளர் ஒருவர் திருடிச் சென்று தலைமறைவானதாகவும் கூறினார்.

அடையாள அட்டை தொலைந்ததால் வேலை இழந்த சசீவா, வீடு திரும்ப முடிவெடுத்திருக்கிறார்.

தற்போது அரசு ஆவணங்களின்படி, சசீவா ‘இறந்த’ நபர். எனவே அதைத் திருத்திச் சரிசெய்வதற்காக உரிய ஆவணங்களுடன் அரசாங்க அலுவலகப் படிகளை அவர் ஏறிவருகிறார்.

இறந்ததாகக் கருதிய சசீவா திரும்பிவந்ததில் அவரது குடும்பத்தினருக்குச் சந்தோஷம் என்றாலும், தங்களால் ‘அடையாளம்’ காட்டப்பட்டு எரியூட்டப்பட்டது எந்த உடல் என்ற குழப்பம் அவர்களுக்குத் தீரவில்லை.

Next Story