மீனவர் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பது தான் நிரந்தர தீர்வு - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


மீனவர் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பது தான் நிரந்தர தீர்வு -  ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 7 Jan 2018 4:45 AM IST (Updated: 7 Jan 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

மீனவர் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பது தான் நிரந்தர தீர்வாகும் என்று ராமேசுவரத்தில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

ராமேசுவரம்,

துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் மாலை அவருடைய மனைவி விஜயலட்சுமி, மகன் பிரதீப்குமார், சகோதரர் ராஜா ஆகியோருடன் ராமேசுவரத்துக்கு வந்தார்

நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனது குடும்பத்தினருடன் அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்று புனித நீராடினார். அதன் பின்னர் கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடினார். பின்னர் அருகில் உள்ள மீனாட்சி மகாலில் காலை 8 மணி அளவில் நடைபெற்ற திலஹோமத்தில் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து காலை 11 மணி அளவில் துணை முதல்–அமைச்சர் தனது குடும்பத்தினருடன் தனுஷ்கோடி புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து ராமேசுவரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலுக்கு வந்தார். அங்கு அவரை மீனவர் சங்க தலைவர்கள் என்.ஜே.போஸ், தேவதாஸ், அருளானந்தம், சேசு, எமரிட், சகாயம் ஆகியோர் சந்தித்து மீனவர்கள் பிரச்சினை குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இதேபோல நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் அருள், பாரம்பரிய ஆழ்கடல் மீனவர் சங்க தலைவர் சேசு இருதயம், செயலாளர் ஆனந்தன் பாய்வா ஆகியோர் மனு அளித்தனர். அதில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு முழுமையாக சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளனர். அவர்களுக்கு இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு முற்றிலும் சேதமடைந்த படகுகளுக்கு கடந்த 2004–ம் ஆண்டு இழப்பீடு வழங்கியது போல தற்போதும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதன் பின்பு ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:–

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்பது தான் சரியானதாகும். கச்சத்தீவை மீட்பேன் என்று கூறிய மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நிலுவையில் உள்ளது. கச்சத்தீவு ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குதான் சொந்தமானது. இது சம்பந்தமான ஆவணங்களை வருவாய்த்துறை சார்பில் சேகரிக்கப்பட்டு சமர்ப்பித்து முறையாக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள முதல்–அமைச்சரிடம் தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story