தற்காலிக ஊழியர்களை கொண்டு மாவட்டத்தில் 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன


தற்காலிக ஊழியர்களை கொண்டு மாவட்டத்தில் 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன
x
தினத்தந்தி 7 Jan 2018 4:00 AM IST (Updated: 7 Jan 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக ஊழியர்களை கொண்டு 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

சிவகங்கை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தற்காலிக ஊழியர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தமட்டில் நேற்றுமுன்தினம் பஸ்கள் பெரும்பாலும் இயக்கப்படாமல் இருந்த நிலையில் நேற்று 50 சதவீத பஸ்கள் தற்காலிக ஊழியர்களை கொண்டு இயக்கப்பட்டன. அதன்படி சிவகங்கை போக்குவரத்துக்கழக பணிமனையில் மொத்தம் உள்ள 60 பஸ்களும் இயக்கப்பட்டன.

முன்னதாக அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் லதா மற்றும் அதிகாரிகள் நேற்று சிவகங்கை பஸ் நிலையத்தில் சென்று பஸ்கள் இயக்கப்படுவதை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்த பயணிகளிடம் சிரமங்கள் ஏதும் உள்ளதா என்று கேட்டனர். பின்னர் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தேவைக்கேற்ப அந்தந்த வழித்தடத்தில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதேபோல் காரைக்குடி பணிமனையில் உள்ள 63 பஸ்களில் 29 பஸ்களே இயக்கப்பட்டன. திருப்பத்தூர் பணிமனையில் மொத்தம் உள்ள 50 அரசு பஸ்களில் 22 பஸ்களும், திருப்புவனம் பணிமனையில் 45 பஸ்களில் 25 பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் 265 அரசு பஸ்கள் உள்ளன. இவற்றில் 60 சதவீத பஸ்கள் நேற்று இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story