கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி,
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ–ஜியோ) சார்பில், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகர்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ–ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பேசினார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 200 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில், தமிழ்நாடு அரசு ஊழயர் சங்க மாவட்ட செயலாளர் முகமதுஅலி ஜின்னா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பழனிராஜ், மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
நேற்று வேட்டி தினம் கடைபிடிக்கப்பட்டதால், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் வேட்டி அணிந்து வந்து இருந்தனர். அவர்கள் வரிசையாக நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.