போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம்: மதுரையில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கின


போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம்: மதுரையில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கின
x
தினத்தந்தி 7 Jan 2018 4:15 AM IST (Updated: 7 Jan 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் மதுரையில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன.

மதுரை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 47 சங்கங்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று 3–வது நாளாக நீடித்தது.

மதுரையை பொறுத்தமட்டில், போராட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் மட்டுமே பஸ்களை இயக்கினர். இதனால் மதுரை மாவட்டத்தில் 30 சதவீத பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பணிமனை முன்பு திரண்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மாநில அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பியவாறு நின்று கொண்டிருந்தனர். இதுபோல் பல பணிமனைகள் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதற்காக வந்திருந்தனர். அவர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபடாத மற்ற தொழிற்சங்க தொழிலாளர்களுக்கும் இடையே பஸ்களை இயக்குவது தொடர்பாக பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையே ஆய்வு நடத்துவதற்காக பைபாஸ் பணிமனைக்கு கலெக்டர் வீரராகவராவ் வந்தார். அப்போது பேசிய அவர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 30 சதவீத பஸ்கள் இயக்கப்படுவதாகவும் கூறினார். இதுபோல் மதுரையில் உள்ள பல பணிமனைகளுக்கு அவர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

அரசு பஸ்கள் ஓடாததால் பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, காம்ப்ளக்ஸ் பஸ் நிலையங்கள் நேற்றும் பயணிகள் அதிகம் இன்றி வெறிச்சோடி கிடந்தன. தனியார் பஸ்கள், மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளே வந்த பயணிகளை ஏற்றிச்சென்றன. அரசு பஸ்களால் எப்போதும் நிரம்பி காட்சி அளிக்கும் பெரியார் பஸ் நிலையம், நேற்று தனியார் பஸ்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர் என பல தரப்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பஸ்கள் இயக்கப்படாததால், பயணிகள் ரெயில் நிலையத்தை நோக்கி படையெடுத்தனர்.

மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், பொதுமக்கள் வேறு வழியின்றி அவற்றில் பயணம் செய்தனர்.

மதுரையில் நேற்றும் அரசு பஸ் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்காலிக ஊழியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கிடையே பணிமனைகளில் ஆய்வு நடத்த வந்த அமைச்சர் செல்லூர்ராஜூ, தற்காலிக ஊழியர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், முத்துபாண்டி என்பவர் பொதுமக்களுக்கு உதவும் வகையில் சம்பளம் எதுவும் வாங்காமல் பஸ்சை இயக்க தாமாக முன்வந்தார். அவரை மற்ற போக்குவரத்து தொழிலாளர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.

மதுரை பழங்காநத்தத்தில் உள்ள போக்குவரத்து பணிமனையில் பஸ்கள் இயக்கப்படுவது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசு நிலுவைத் தொகையை வழங்கியுள்ளது. போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கும்போது கூட ஊழியர்களுக்கு சம்பள உயர்வினை தமிழக அரசு வழங்கி உள்ளது. போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டத்தில் தி.மு.க. பின்புலமாக இருக்கிறது. இதற்கு மற்ற எதிர்க்கட்சிகள் துணை போகின்றன. இதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்“ என்றார்.


Next Story