9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை தந்தை இறந்த 20 நாளில் சோகம்


9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை தந்தை இறந்த 20 நாளில் சோகம்
x
தினத்தந்தி 7 Jan 2018 4:45 AM IST (Updated: 7 Jan 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தந்தை இறந்த 20 நாளில் சோகம் தாங்க முடியாமல் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

சேலம்,

சேலம் குகை கருங்கல்பட்டி தெற்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்ஜோதி. ஜவுளி வியாபாரி. இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு ஜெகநாதன் (வயது 14) உள்பட 2 மகன்கள் உள்ளனர். ஜெகநாதன், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையே, கடந்த 20 நாட்களுக்கு முன்பு அருள்ஜோதி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது மகன் ஜெகநாதன் மனஉளைச்சல் அடைந்து சோகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், நேற்று காலை வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற அவர் நீண்டநேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கழிவறையின் கதவை திறந்து பார்த்தபோது, அங்கு ஜெகநாதன் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை பார்த்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் ஜெகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தந்தை இறந்து 20 நாளில் அவரது மகன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கருங்கல்பட்டி பகுதியில் வசிக்கும் அவரது உறவினர்களிடமும், பொதுமக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story