கொட்டாம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் மர்ம சாவு, கணவர் தலைமறைவு
கொட்டாம்பட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் மர்மாக இறந்தார். பெண்ணின் உடலை கொண்டு வந்து போட்டு சென்ற கணவர் தலைமறைவானார்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் பாலகிருஷ்ணன் (வயது 30). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் பாலகிருஷ்ணன் 2–வதாக கார்த்திகா என்ற பெண்ணை திருமணம் செய்ததால், லதா கோபித்துகொண்டு பட்டுக்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கார்த்திகாவிற்கும் 3 குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் மனைவி இருவரும் அங்கு கூலி வேலை செய்து வந்தனர். அப்போது வேலைக்கு செல்லும் போது மங்களாம்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவரின் மகள் வள்ளி (20) என்பவருக்கும் பாலகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, வள்ளியை 3–வதாக திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த கார்த்திகாவும் கோபித்துக் கொண்டு சிங்கம்புணரியை அடுத்த காளாப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
அதைத்தொடர்ந்து வள்ளியுடன் பாலகிருஷ்ணன் பழனிக்கு சென்று அங்கு குடியிருந்து வந்தாராம். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை, வள்ளி இறந்த நிலையில் அவரை ஆம்புலன்சில் கொண்டு வந்து மங்களாம்பட்டியில் உள்ள வீட்டின் வெளியே உடலை இறக்கி வைத்துவிட்டு பாலகிருஷ்ணன் தலைமறைவானாராம்.
வெளியில் சென்றிருந்த வள்ளியின் பெற்றோர் இதுபற்றி அறிந்ததும் வீட்டிற்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக பெண்ணின் தந்தை பாண்டி கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வள்ளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து கணவர் பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.