மாவட்டத்தில், 3-வது நாளாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்


மாவட்டத்தில், 3-வது நாளாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 7 Jan 2018 4:15 AM IST (Updated: 7 Jan 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 3-வது நாளாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஆகிய 4 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளை சேர்ந்த சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 13 சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே 3-வது நாளான நேற்று நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நாமக்கல்லில் இருந்து சேலம், திருச்சி, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ் சேவை குறைவாகவே இருந்தது. நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் பள்ளிபாளையம் ஆகிய 4 இடங்களில் உள்ள பணிமனைகளில் 350 அரசு பஸ்கள் உள்ளன. இதில் நேற்று 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கும்பகோணம், மதுரை கோட்டங்களில் இருந்து வரும் ஒருசில பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டதாக அவர்கள் கூறினர். இதற்கிடையே பொதுமக்களின் நடமாட்டமும் நாமக்கல் பஸ்நிலையத்தில் வழக்கத்தை விட குறைவாகவே காணப்பட்டது. போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னிட்டு நாமக்கல் பஸ்நிலையம் மற்றும் பணிமனை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பஸ் தொழிலாளர்கள் கூறியதாவது:-

பெரும்பாலான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். தனியார் கல்லூரி மற்றும் பஸ் டிரைவர்களை கொண்டும் அதிகாரிகள் பஸ்களை இயக்கி வருகின்றனர். அப்போதும் பெரும்பாலான பஸ்கள் நாமக்கல் மாவட்டத்தில் இயங்கவில்லை. பணிமனைகளில் இருந்து பஸ் நிலையத்திற்கு பஸ்கள் சென்றாலும் வழித்தடங்களில் அதிகளவில் செல்லவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திருச்செங்கோட்டில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாற்று டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மூலம் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்து இருந்தனர். மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். போக்குவரத்து கழக பணிமனை மற்றும் பஸ் நிலையத்தில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.

ராசிபுரம் பகுதியில் நேற்று நகர, புறநகர் பஸ்கள் வழக்கம்போல இயங்கின. பொதுமக்கள் எந்த வித சிரமமும் இன்றி பஸ்களில் பயணம் மேற்கொண்டனர்.


Next Story