11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளையும், அமைச்சு பணியாளர், கண்காணிப்பாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள அரசு அதிகாரிகள், களப்பணியாளர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளையும் களையவேண்டும்.
உச்சவரம்பின்றி ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்கவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கவேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், ஊர்புற நூல்கள், பகுதி நேரம் மற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ –ஜியோ அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் பாபு தலைமை தாங்கினார். சண்முகம், ரஞ்சித்குமார், ராஜமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் ஜாக்டோ–ஜியோ பொறுப்பாளர்கள் ஆனந்த கணேஷ், கோபாலகிருஷ்ணன், ஜனார்த்தனன் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.