பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் அரசு ஊழியர்கள்– ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் அரசு ஊழியர்கள்– ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம்,
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று காலை தமிழ்நாடு அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ–ஜியோ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் நடராசன், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி தமிழாசிரியர் கழக மாநில பொருளாளர் ராமதாஸ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் செல்லையா, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் ரஹீம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஊதியக்குழுவில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உச்ச வரம்பின்றி ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும், ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் தொகுப்பூதிய முறையை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் நிதி காப்பாளர் சண்முகசாமி நன்றி கூறினார்.