டாஸ்மாக் கடையில் கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளி கொலை


டாஸ்மாக் கடையில் கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளி கொலை
x
தினத்தந்தி 7 Jan 2018 4:30 AM IST (Updated: 7 Jan 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் டாஸ்மாக் கடையில் கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளியை கொலை செய்த மர்மநபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கரூர்,

கரூர் அருகே அரிக்காரம்பாளையத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் இரவு நேர காவலாளியாக கரூர் கோதூர் பகுதியை சேர்ந்த காளியப்பன்(வயது 60) பணியாற்றி வந்தார். டாஸ்மாக் கடையின் அருகே பார் உள்ளது. பார் ஊழியர்கள் அதிலே தங்கி இருப்பார்கள். டாஸ்மாக் கடை நேற்று முன்தினம் இரவு மூடப்பட்டதும் கடையின் முன்பு காளியப்பன் கட்டிலில் படுத்து தூங்கினார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு காளியப்பன் எழுந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் பூட்டை உடைத்து கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த காளியப்பன் சத்தம் போட்டார். அப்போது அந்த மர்மநபர் இரும்பு கம்பியால் காளியப்பனின் தலையில் சரமாரியாக அடித்தார். இதில் அவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார்.

இதற்கிடையில் காவலாளி காளியப்பனின் அலறல் சத்தம் கேட்டு பார் ஊழியர்கள் 3 பேர் கதவை திறந்து வெளியே வர முயன்றனர். ஆனால் கதவின் தாழ்ப்பாள் வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால் கதவை திறக்க முடியவில்லை. இதனால் பாரில் மற்றொரு பகுதியில் உள்ள இடைவெளி வழியாக 3 பேரும் விரைந்து வந்தனர். இதனை கண்ட அந்த மர்மநபர் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்றும் பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய காளியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் காளியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கொலை நடந்த சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்மநபர் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்துள்ளார். பார் ஊழியர்கள் தங்கியிருந்த பகுதியின் கதவின் தாழ்ப்பாளை வெளிப்பக்கம் பூட்டி விட்டு, கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது காவலாளி சத்தம் கேட்டு எழுந்ததால் அவரை இரும்பு கம்பியால் அடித்து விட்டு மர்மநபர் தப்பியோடியது தெரியவந்தது.

டாஸ்மாக் கடையில் கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கு குறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்த மர்மநபரை வலை வீசி தேடி வருகின்றனர். 

Next Story